பொங்கல் விடுப்பு முடிந்ததும் செய்முறை பயிற்சிக்கு உத்தரவு
சென்னை: பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்ததும், பொது தேர்வு மாணவர்களுக்கு செய்முறை பயிற்சி வழங்க, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச்சில் பொது தேர்வு நடத்தப்படுகிறது. பிளஸ் 2வுக்கு மார்ச் 1 முதல், 22 வரை; பிளஸ் 1க்கு மார்ச் 4 முதல், 25 வரை; 10ம் வகுப்புக்கு, மார்ச் 26 முதல், ஏப்., 8 வரை பொது தேர்வுகள் நடக்கின்றன. பிளஸ் 2வுக்கு, பிப்., 12 முதல் 17 வரை செய்முறை தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதையடுத்து, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்தப்பட உள்ளது.இதையொட்டி, பொங்கல் விடுமுறை முடிந்ததும், பள்ளிகளிலேயே செய்முறை தேர்வுக்கான ஆய்வக பயிற்சி வகுப்புகளை நடத்தி, மாணவர்களை தயார் செய்ய வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.