ஆபத்தான பள்ளி கட்டடம்: மாணவரை அனுப்ப மறுப்பு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே வளநாடு அரசு உயர்நிலைப்பள்ளி கட்டடத்தின் சிமென்ட் பூச்சுகள் அவ்வப்போது பெயர்ந்து விழுவதால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.இனிவரும் நாட்களில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதற்கு பெற்றோர் அச்சப்படுகின்றனர். முதுகுளத்துார் அருகே வளநாடு அரசு உயர் நிலைப்பள்ளியில் வளநாடு, செங்கப்படை, தெய்வதானம், இந்திரா நகர், சேமனுார், செபஸ்தியார்புரம் உள்ளிட்ட கிராமங்களில் இருக்கும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக அரசு உயர்நிலைப்பள்ளி கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது. 2022ம் ஆண்டு பள்ளி கட்டடத்தின் கூரை இடிந்து விழுந்தது. தற்போது மீண்டும் கட்டடத்தின் கூரையில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்துள்ளது. இதனால் பள்ளிக்கு செல்ல மாணவர்கள் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து விக்னேஸ்வரன் கூறியதாவது:வளநாடு அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டடம் கட்டி திறக்கப்பட்டது. திறந்து 6 மாதத்தில் 2022ம் ஆண்டு தலைமையாசிரியர் அறையில் கூரை இடிந்து விழுந்தது. அதிகாரிகள் ஆய்வு செய்து பராமரிப்பு பணி செய்தனர்.கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு பள்ளியில் பராமரிப்பு பணி செய்யப்பட்டது. முறையாக பணி செய்யாததால் மீண்டும் பள்ளி வகுப்பறை முன்பு கூரை பெயர்ந்து விழுந்தது. யாரும் இல்லாத போது விழுந்ததால் எந்த பாதிப்பும் இல்லை.தொடர்ந்து இடிந்து விழுவதால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். கழிப்பறையும் சேதமடைந்துள்ளது. இதனால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டுகின்றனர். புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டுவதால் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கட்டடத்தின் தரம் குறித்து ஆய்வு செய்து சீரமைக்க கோரிக்கை விடுத்தனர்.