பள்ளி நேரத்தில் தன்னார்வலர்களுக்கு தடை: தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை
உடுமலை: இல்லம் தேடி கல்வி&' தன்னார்வலர்களை பகல் நேரத்தில் பள்ளிக்கு வரவழைத்து வகுப்பறை பாடங்களை நடத்தச் சொல்லக்கூடாது என, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காலத்தில், ஒன்று முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களிடம் கற்றல் இழப்பு ஏற்பட்டது.இதனை சரி செய்யும் பொருட்டும், தன்னார்வலர் பங்களிப்புடன் கற்றல் வாய்ப்பு வழங்குதல், கற்றல் திறனை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டது.இதற்காக, திருப்பூர் மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வாயிலாக, பள்ளிகள் சார்ந்த குடியிருப்பு பகுதிக்கு ஏற்றாற்போல், தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், பள்ளிகள், தங்கள் வீடுகள் அல்லது தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் மாலை நேர வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், தன்னார்வலர்களை பகல் நேரத்தில் பள்ளிக்கு வரவழைத்து வகுப்பறை பாடங்களை நடத்தச்சொல்வதோ, பள்ளி வேலைகளை செய்யச்சொல்வதோ கூடாது என, பள்ளிக்கல்வி இயக்குனர் தரப்பில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், இது தொடர்பாக, அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தன்னார்வலர்கள் வகுப்பறையில் இருந்தால், தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளிக்கல்வி இயக்குனர் எச்சரித்துள்ளார், என்றனர்.