வளாகத்தில் காய்கறி தோட்டங்கள் அரசுப்பள்ளி மாணவர்கள் முயற்சி
விருதுநகர்: மனிதனுக்கு இயல்பிலே இயற்கை மீது அதீத ஆர்வமுண்டு. ஆதி மனிதனுக்கு மரங்களோடு இருக்கவே விருப்பமுண்டு. ஆதலால் தான் அவன் காடுகளில் குடிசை போட்டு வாழ்ந்து வந்தான்.நாளடைவில் நாகரீகம் தோன்றி பற்பல முன்னேற்றங்கள் கண்டு வந்தாலும் மரங்கள் வளர்ப்பதில் மனிதனுக்கு ஒரு போதும் அவனது ஆர்வம் குறையவில்லை. மரங்களின் அருமை கோடை காலங்களில் தான் தெரியும் என்பது முதுமொழி.காற்றில் அதிகரித்து வரும் கார்பன் டை ஆக்ஸைடை சுத்திகரிப்பது மட்டும் தான் மரங்களின் வேலையா. மரங்கள் நமக்கு பல்வேறு உதவிகள் செய்கின்றன. மண்ணின் வளத்தை பெருக்கி அதன் செம்மையை கூட்டுகின்றன. நிலத்தடி நீரை பெருக்க உதவுகின்றன. மனிதனுக்கு உளவியல் ரீதியாக பல வகைகளில் உதவுகின்றன.மன அழுத்தமுள்ளோர் காலை, மாலை நேரங்களில் மரங்கள், தோட்டங்களுக்கு நடுவே நேரம் செலவிடுவது மனதை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இவ்வாறு பலவகைகளில் மரங்கள் நமக்கு உதவுகின்றன.அந்த வகையில் விருதுநகர் அருகே ஆமத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் மூலிகை, காய்கறிகள் தோட்டங்கள், மரங்கள் வளர்ந்து பசுமையாக காணப்படுகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியை மரிய கிரேஸி தனது சுய ஆர்வத்தில் மூலிகை, காய்கறி, பழ தோட்டம் அமைத்து 10 ஆண்டுகளாக வளர்க்கிறார். இவருக்கு 6 முதல் 10 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் உதவுகின்றனர். இதே போல் வேளாண் அறிவியல் பாடத்திட்டம் பிளஸ் 1, 2 மாணவர்களுக்கு இருப்பதால் அவர்களுக்கென தனி தோட்டமும் அமைக்கப்பட்டுள்ளது. இவை தவிர வளாகம் முழுவதும் வேம்பு புங்கன் மரங்கள் காணப்படுகின்றன.கல்வி மட்டுமின்றி இயற்கை மீதான ஆர்வத்தை ஊட்டும் வகையில் இந்த பணியை செய்யும் ஆசிரியர்கள், மாணவர்களை தலைமை ஆசிரியை ஜெயமுருகானந்தி ஊக்குவித்து வருகிறார். தோட்டங்களில் விளைவிக்கப்படும் காய்கள் சத்துணவுக்காகவும், மாணவர்கள், ஆசிரியர்களும் பயன்படுத்துகின்றனர். சிறு சிறு உபாதைகளுக்கு மூலிகைகளை பயன்படுத்துகின்றனர்.துளசி இருமல், சளி காய்ச்சலுக்கும், கற்பூரவள்ளி சுவாச நிவாரணி, சோற்று கற்றாழை உடல் குளிர்ச்சி சரும பிரச்னை, சங்கு புஷ்பம் தோல் நோய், செரிமான பிரச்னைகளுக்கு தீர்வாக உள்ளது. பப்பாளி வயிற்று கிருமிகளும் நிவாரணி, துாதுவளை இருமலுக்கும், மணத்தக்காளி ரத்தத்தை சுத்தம் செய்கிறது. 6, 7, 8ல் விருப்பமுள்ள மாணவர்களை தோட்ட பராமரிப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். இது அவர்களுக்கும் ஒரு வகையில் என மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. வேளாண் பிரிவு மாணவர்கள் உதவி செய்கின்றனர். 45 நாட்களில் மண்புழு உரங்களை தயாரித்து அதை தோட்டத்தில் போடுகிறோம் என மரிய கிரேஸி, இடைநிலை ஆசிரியை ஆமத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி, விருதுநகர் கூறினார்.மேல்நிலை வகுப்புகளுக்கு வேளாண் அறிவியல் என்ற பாடம் உள்ளது. இதற்கு செய்முறை உள்ளதால் ஆசிரியர் பழனிச்சாமி வழிகாட்டுதல் படி மாணவர்களான நாங்களே தோட்டத்தை பராமரிக்கிறோம். இதன் மூலம் விவசாயம் தொடர்பான நிறைய தெளிவு கிடைக்கிறது. நிறைய மர வகைகள் நட்டுள்ளோம். காய்கறிகள், வாழை நட்டுள்ளோம். ஆக்சிஜனை அதிகரிக்கும் 150 மூங்கில்கள் உள்ளன. நாங்கள் கற்று கொண்டதை இடைநிலை பள்ளி மாணவர்களுக்கும் கற்று கொடுக்கிறோம். மண் வளத்தின் முக்கியம், இயற்கை விவசாயம் பற்றி எடுத்து கூறுகிறோம் என பூஜா, பிளஸ் 1 மாணவி ஆமத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி, விருதுநகர் கூறினார்.