நீட், ஜே.இ.இ., பயிற்சி பள்ளியளவில் துவங்க உத்தரவு
உடுமலை: பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவருக்கு நீட், ஜே.இ.இ., பயிற்சியை பள்ளியளவில் உடனடியாகத் துவக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவருக்கு நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சிகளை துவங்க வேண்டும்; மாதிரி தேர்வு நடத்த வேண்டும்.போட்டித்தேர்வில் பங்கேற்க ஆர்வமுள்ள மாணவ, மாணவியரை பள்ளி தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர் தேர்வு செய்ய வேண்டும்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர், இயற்பியல், கணிதம், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் ஒவ்வொரு பாடத்துக்கும் இரண்டு பாட வல்லுனர் வீதம், பத்து ஆசிரியர்கள் அடங்கிய, அனுபவம் வாய்ந்த குழுவை அமைக்க வேண்டும்.அனைத்து வேலை நாட்களிலும் பாடவாரியாாக மாலை, 4:00 முதல், 5:15 மணி வரை பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும். திங்கள் - தாவரவியல், கணிதம், செவ்வாய் - இயற்பியல், புதன் - விலங்கியல், கணிதம், வியாழன் - வேதியியல், வெள்ளி - மீள்பார்வை என்ற அடிப்படையில் பயிற்சிகளை வழங்க வேண்டும்.பள்ளி அளவிலான தினசரி தேர்வுகள், ஒவ்வொரு மாதமும் இரண்டு சனிக்கிழமை நடத்த வேண்டும். உயர்தொழில் ஆய்வகம் வாயிலாக பயிற்சி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது.அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், கல்வித்துறை மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.