உள்ளூர் செய்திகள்

தனியார் பள்ளிகளுக்கு அரசு பாராட்டு விழா நடத்துவதா?

சென்னை: வணிக நோக்கத்துடன் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கு பாராட்டு விழா நடத்தினால், அது, மிக மோசமான முன் உதாரணமாகும் என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 3,949 தனியார் பள்ளிகளுக்கு, அரசு சார்பில் ஆகஸ்ட் 4ல் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. விழாவில், அமைச்சர்கள் உதயநிதி, மகேஷ் பங்கேற்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.தனியார் பள்ளிகள் பொதுத்தேர்வுகளில், 100 சதவீதம் தேர்ச்சி பெறுவது சாதனை அல்ல. காரணம், அவை நன்கு படிக்கக்கூடிய மாணவர்களை மட்டுமே தேர்வுக்கு அனுப்புகின்றன.தனியார் பள்ளிகளில் உள்ள கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களுக்கான பணிச்சுமை குறைவு போன்றவற்றை பார்க்கும்போது, தனியார் பள்ளிகளில், 100 சதவீதம் தேர்ச்சியை எட்டுவது எளிதானதே.மாறாக, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமலும், ஆசிரியர்கள் பற்றாக்குறையாலும் தள்ளாடும் அரசு பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெறுவது தான் சாதனை.தனியார் பள்ளிகளுக்கு அரசே பாராட்டு விழா நடத்துவது தேவையற்றது; நியாயமற்றது. தனியார் பள்ளிகளுக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவமும், மரியாதையும் அளிப்பதன் பின்னணியில் ஏதோ ஒரு காரணம் உள்ளது.தமிழகத்தில் உள்ள எந்த தனியார் பள்ளியும், கல்வி வழங்குவதை சேவையாக செய்வதில்லை; முழுக்க முழுக்க வணிக நோக்கத்துடனே செயல்படுகின்றன. அந்த வணிக நோக்கத்திற்கு, அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தினால், அது மிக மோசமான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்