உள்ளூர் செய்திகள்

நேர்மறை சிந்தனையை விதைப்பது புத்தகங்களே! வழக்கறிஞர் எம்.பி.நாதன்

சென்னை: சென்னையில் நடந்துவரும் புத்தகக் காட்சியின் வெளி அரங்கில் ஒளியுறும் அறிவு என்ற தலைப்பில், வழக்கறிஞர் எம்.பி.நாதன் பேசினார்.அவர் பேசியதாவது:அம்மாவின் ஆசி இல்லாமல் நாம் முன்னேற முடியாது என்றார் ஆதி சங்கரர். அதனால்தான், மாதா, பிதா, குரு, தெய்வம் என, வரிசைப்படுத்தினர் நம் முன்னோர்கள். சுடர் மிகும் அறிவு என்கிறான் பாரதி. அதுதான் ஒளியுறும் அறிவு.மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் அறிவு உண்டு. ஆனால், ஒளியுறும் அறிவு மனிதர்களுக்கு மட்டுமே உண்டு.மனிதர்களில் நடுநிலை, எதிர்மறை, நேர்மறை என, மூன்று வகை சிந்தனையாளர்கள் உண்டு. இதில், நடுநிலை எனும் நிலைப்பாட்டை உடையவர்கள், விமர்சனம் என்ற பெயரில், அனைத்து செயல்களுக்கும் ஏதாவது கருத்து சொல்லியபடியே இருப்பர். இவர்களைத் தவிர்ப்பது நல்லது.எதிர்மறை சிந்தனையாளர்கள், அனைத்தையும் குறை கூறுவர். இவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லது. முடிந்தால் இவர்களைத் திருத்தலாம். நேர்மறை சிந்தனையாளர்கள், நமக்குள் ஊக்கத்தை விதைப்பர். இவர்கள் தாய், தந்தையின் ஆசி பெற்றவர்கள். இவர்களின் உள்ளுணர்வு, ஒளியுறும் அறிவால் நிரம்பியிருக்கும்.தெய்வத்தையும், தெய்வமற்ற தெய்வத்தையும் உரைத்த பாரதியின் புதிய ஆத்திச்சூடியில், இந்திய அரசியல் அமைப்பு, நீதி நுால்கள், இலக்கியங்கள் கூறாத கருத்துகள் அடங்கியுள்ளன.ஜாதி, மதம், இனம், மொழி பேதங்கள் பார்க்காமல், மனதைச் செம்மைப்படுத்தி, தனி மனித ஒழுக்கத்தை நமக்குள் விதைத்து, நேர்மறை எண்ணங்களால் மனதை நிறைப்பதே ஒளியுறும் அறிவு. புத்தகங்கள்தான் ஒளியுறும் அறிவை நமக்குத் தரும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்