தொடர் மாற்றுப்பணி அரசு கல்லுாரி ஆசிரியர்கள் எதிர்ப்பு
சென்னை: தமிழகத்தில் புதிதாக துவக்கப்பட்டுள்ள, 11 அரசு கலை - அறிவியல் கல்லுாரிகளில், தொடர்ச்சியாக மாற்றுப்பணி வழங்குவதற்கு, பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்தாண்டு புதிதாக, 11 கலை - அறிவியல் கல்லுாரிகளை அரசு துவக்கி உள்ளது. அவற்றில் பணியாற்ற, பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், அருகில் உள்ள கல்லுாரி பேராசிரியர்களை, புதிய கல்லுாரிகளுக்கு சென்று பணியாற்றும்படி, கடந்த மே 25ல், உயர் கல்வி துறை உத்தரவிட்டது.ஒவ்வொரு கல்லுாரியில் இருந்தும், ஐந்து அல்லது ஆறு பேராசிரியர்கள் மாற்றுப் பணிக்கு அனுப்பப்படுகின்றனர். ஓராண்டு காலத்துக்கு இதுபோல் மாற்றுப்பணி வழங்குவது நடைமுறைதான் என்றாலும், கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேல் மாற்றுப்பணி செய்த 12 பேராசிரியர்களுக்கு, இந்தாண்டும் மாற்றுப்பணி வழங்கப்பட்டு உள்ளது.இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இளைய பேராசிரியர்களுக்கு இதுபோன்ற மாற்றுப் பணிகள் வழங்கப்படவில்லை. அண்ணாமலை பல்கலையில் மிகை ஆசிரியர்கள் உள்ள நிலையில், அவர்களுக்கு மாற்றுப்பணி வழங்கவில்லை என, அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.