உள்ளூர் செய்திகள்

தமிழகத்தின் இரும்பு காலத்தை வரையறுத்தது தொல்லியல் துறை

சென்னை: தமிழகத்தில் இரும்பு பயன்படுத்தப்பட்ட காலத்தை, அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட இரும்பு பொருட்களை, அறிவியல் முறையில் காலக்கணிப்பு செய்து, தமிழக தொல்லியல் துறை பட்டியலிட்டுள்ளது.உலகில் இரும்பு பயன்பாடுக்கு பின், தொழில்நுட்ப வளர்ச்சி விரைவானது. இரும்பு கண்டுபிடிப்புக்கு பல நாடுகள் உரிமை கொண்டாடுகின்றன.இந்நிலையில், தமிழகத்தில் சமீப காலமாக நடந்த அகழாய்வுகளில் கிடைத்த இரும்பு பொருட்கள், உருக்கு உலைகளில் கிடைத்த கசடுகள் உள்ளிட்டவை, ஏற்கனவே இருந்த கருத்துகளுக்கு மாற்றாக உள்ளன. அதன்படி, இதுவரை கணிக்கப்பட்ட காலத்துக்கு முன்பே, தமிழகத்தில் இரும்பு பயன்பாடு இருந்தது தெரிய வந்துள்ளது.சமீபத்தில், கா.ராஜன், ரா.சிவானந்தம். வி.ப.யதீஸ் குமார் ஆகியோர் எழுதி, தமிழக தொல்லியல் துறையால் வெளியிடப்பட்ட, 'தமிழ்நாட்டு தொல்லியல் தளங்களின் அண்மைக்கால அறிவியல் காலக்கணக்கீடுகள்' என்ற நுாலில், இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது:ஆதிச்சநல்லுார் மற்றும் சிவகளை ஆய்வுகள், இரும்பின் அறிமுகம் குறித்த புரிதலை மாற்றியுள்ளன. சிவகளையில், இரும்பு பொருட்கள் கிடைத்த மண்ணடுக்குகளில், சேகரிக்கப்பட்ட மாதிரிகளை, உலகின் பிரபலமான ஆய்வகங்களில், பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தினோம். அதன்படி, இரும்பின் அறிமுகம், பொ.யு.மு., 2,427 - 3,345 என உறுதியாகி உள்ளது. இந்தியாவில் இரும்பின் அறிமுகம், 3,000 ஆண்டின் இறுதிப் பகுதியாக இருந்தது.கீழ்நமண்டி, மாங்காடு, தெலுங்கனுார், மயிலாடும்பாறை, ஆதிச்சநல்லுார் மற்றும் சிவகளை உள்ளிட்ட இடங் களில் கிடைத்த ஈமப் பொருட்களின் காலக்கணிப்பில், வடமாநிலங்களின் செம்புக்காலமும், தென்மாநிலங்களின் இரும்புக்காலமும் சமகாலம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.சிவகளையில் கிடைத்தது, தொடக்க கால இரும்பு என்பதும், அதன் காலம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதும் உறுதியாகி உள்ளது.சிவகளை, மயிலாடும்பாறை, ஆதிச்சநல்லுார், திருமலாபுரம், துலுக்கர்பட்டி, கீழ்நமண்டி மற்றும் தெலுங்கனுார் ஆகிய இடங்களில், உள்பண்பாட்டு கட்டங்கள் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்நுாலில், நெல் சாகுபடியின் துவக்கம், குறியீடுகள், எழுத்துக்களின் பயன்பாடு, உயர் ரக தகர வெண்கலம், தங்கம் உள்ளிட்ட உலோக பயன்பாடுகளின் தொடக்கம் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்