உள்ளூர் செய்திகள்

தமிழகம் போதை களமாவதாக அரசியல் கட்சிகள் கண்டனம்

கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள், 'ரீல்ஸ்' மோகத்தால் , வடமாநில வாலிபரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம், தமிழகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது . வெட்டுப்பட்ட வடமாநில வாலிபர் உயிருக்கு போராடி வருகிறார். தமிழகம் போதைக்களமாக மாறிவிட்டதாக , அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதிகளில், கஞ்சா அதிகம் விற்கப்பட்டு வருகிறது. ஆந்திராவில் இருந்து திருத்தணி வழியாக வேலுார், ராணிப்பேட்டை மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு, கஞ்சா பெட்டலங்கள் கடத்தப்படுவதும் அதிகம் நடந்து வருகிறது.கஞ்சா பழக்கத்திற்கு பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வாலிபர்கள் அடிமையாகி, குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த இருபத்து ஏழாம் தேதி, திருத்தணி ரயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில், வாலிபர் ஒருவர் வெட்டு காயங்களுடன், ஆபத்தான நிலையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.திருத்தணி போலீசார் விரைந்து சென்று, வாலிபரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, முதலுதவி சிகிச்சைக்கு பின், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருத்தணி போலீசார் விசாரித்ததில், காயமடைந்த வாலிபர் மஹாராஷ்டிரா மாநிலம், சோலப்பூரை சேர்ந்த சுராஜ் என்பதும், கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள், அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியதும் தெரிய வந்தது.இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் வடமாநில வாலிபர் சுராஜை, சிறுவர்கள் அரிவாளால் வெட்டும் காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவி, தமிழகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போலீசார் வீடியோ காட்சி பதிவுகளை வைத்து விசாரித்ததில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகாவைச் சேர்ந்த இருவர், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகாவைச் சேர்ந்த இருவர் என, பதினேழு வயதுள்ள நான்கு சிறுவர்கள் இதில் ஈடுபட்டதும், கஞ்சா போதையில் இருந்ததும் தெரிந்ததுநான்கு சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் மூன்று சிறுவர்கள், செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர். ஒருவர், பிளஸ் இரண்டு படித்து வருவதால், நீதிமன்ற ஜாமினில் விடுவிக்கப்பட்டார். கஞ்சா போதைக்கு அடிமையான சிறுவர்களின் கொடூரமான செயல், பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.'ரீல்ஸ்' எடுப்பதை தடுத்ததால் வெட்டினோம் போலீஸ் விசாரணையில் சிறுவர்கள் கூறியதாவது: நாங்கள் நான்கு பேரும் நண்பர்கள். கடந்த இருபத்து ஏழில், திருவாலங்காடு - திருத்தணி செல்லும் மின்சார ரயிலில் ஏறினோம். அப்போது, எங்கள் பெட்டியில் வடமாநில வாலிபர், பயணியர் ஏறி, இறங்கும் பகுதியில் அமர்ந்து பயணம் செய்தார். நாங்கள் வாலிபரை அரிவாளை காட்டி மிரட்டுவது போல், 'ரீல்ஸ்' எடுப்பதற்காக, மொபைல்போனில் வீடியோ எடுத்தோம். அதை அவர் தடுத்தார். திருத்தணி ரயில் நிலையம் வந்தவுடன், வடமாநில வாலிபரை ரயிலில் இருந்து இறக்கி, அங்குள்ள ரயில்வே குடியிருப்பு பகுதிக்கு அழைத்து சென்று, அரிவாளால் வெட்டி, அதை வீடியோ எடுத்து, 'ரீல்ஸ்' வெளியிட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர். புத்தகம் இருக்க வேண்டிய கையில் பட்டாக்கத்தி அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: புத்தகம் பிடிக்க வேண்டிய கையில், அரிவாள்கள் வைத்து, வடமாநில வாலிபரை சிறுவர்கள் வெட்டியது மிகவும் கண்டிக்கத்தக்கது. தி.மு.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்பதற்கு, இதுவே ஒரு சாட்சி. சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டையும் , போதை பொருள் புழக்கத்தையும் கட்டுக்குள் கொண்டுவர கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்., - எம்.பி., கார்த்திக் சிதம்பரம்: திருத்தணியில் வடமாநில வாலிபரை , சிறுவர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில், 'புள்ளிங்கோ' அச்சுறுத்தலை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். தமிழக பா.ஜ., மாநில செயலர் அஸ்வத்தாமன்: ரீல்ஸ் போடுவதற்காக, வாலிபரை கொலை செய்யும் அளவுக்கு சிறார்கள் சென்றிருக்கிறார்கள். கொடூர மனம் கொண்டவர்களாக சிறுவர்கள் மாறியதற்கு, பரவலாக்கப்பட்டு வரும் கஞ்சா, போதைப்பொருட்கள்தான் காரணம். போதைக்களமாக தமிழகம் மாறி வருகிறது. கஞ்சா போதையில் இன்னொரு சம்பவம் நடக்காது என்பதற்கு என்ன நிச்சயம். இந்தளவு சமூக சீர்கேட்டிற்கும், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கும் தமிழக மக்கள் விரைவில் பதில் சொல்வார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்