ஆகாஷ் ஏவுகணை லாஞ்சர் கோவை நிறுவனம் தயாரிப்பு
இந்திய ராணுவத்திற்கு ஏவுகணை செலுத்தும் லாஞ்சரை, கோவையை சேர்ந்த, 'மேக் கன்ட்ரோல்' நிறுவனம் உருவாக்கி வழங்கியுள்ளது. புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணைகளை துல்லியமாக செலுத்த இந்த லாஞ்சர் உதவும்.கோவை மேக் கன்ட் ரோல்ஸ் அண்டு சிஸ்டம்ஸ் வடிவமைத்த, ஆகாஷ் என்.ஜி., ஏவுகணை லாஞ்சர் ஏற்பு விழா, கோவையில் நேற்று நடந்தது. இதில், லாஞ்சர் வடிவமைத்த மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.மேக் கன்ட்ரோல் நிறுவனத்தின் துணைத் தலைவர் சுந்தரம் பேசுகையில், "பாதுகாப்பு துறையில் உள்ள அதிகாரிகளை சந்திப்பது முன்பு அரிதாக இருந்தது. ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்து வந்தோம்.கடந்த, 10 ஆண்டுகளில் அரசின் கொள்கை மாற்றங்களால் அவற்றை ஏற்று மதி செய்யும் அளவிற்கு உயர்ந்துள்ளது. புதிய தளவாடங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் உதவி வருகிறது," என்றார்.பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் ஏவுகணை திட்ட இயக்குநர் ராஜா பாபு பேசுகையில், "ஐந்து ஆண்டுகளில், இந்தியாவில் ராணுவ பாதுகாப்புக்கான தளவாடங்களை உற்பத்தி செய்வதில், உள்நாட்டு நிறுவனங்கள் வேகம் பெற்றுள்ளன.அரசின் ஊக்கமும், கொள்கையும் வழி வகுத்துள்ளன. பாதுகாப்பு துறைக்கு இவை சப்ளை செய்யும் நிறுவனங்கள் நிலையிலிருந்து பங்குதாரர்களாக மாறியுள்ளன," என்றார்.நிகழ்ச்சியில், 'பெல்' பொது மேலாளர் மஞ்சுளா தேவி, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வக அதிகாரிகள் அன்கதி ராஜு, மகரந்த் ஜோஷி, ஆகாஷ் ஏவுகணை திட்ட இயக்குநர் திவாரி, முன்னாள் இயக்குநர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.