தன்னம்பிக்கையே உண்மையான பலம்: கல்வி அமைச்சர்
புதுடில்லி: “மதிப்பெண் பட்டியல் ஒருவரை வரையறுப்பதில்லை. தன்னம்பிக்கையே உண்மையான பலம். நம்பிக்கையோடும், சமநிலையோடும் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்,” என, டில்லி கல்வித்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட் பேசினார்.தேர்வு எழுதும் மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும், “பரிக் ஷா பே சர்ச்சா 2026” நிகழ்ச்சி மோதி பாக், நானக்புரா சி.எம்.ஸ்ரீ., பள்ளியில் நேற்று நடந்தது. மாணவ, மாணவியருடன் உரையாடிய கல்வி அமைச்சர் ஆஷிஷ் சூட் பேசியதாவது:பள்ளித் தேர்வுகளை பயத்துடன் அணுகாமல், கற்றல் அனுபவமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் நடக்கும் இந்த நிகழ்ச்சியால், மாணவ, மாணவியரின் மனநலன் மற்றும் தன்னம்பிக்கை மீது கவனம் செலுத்தப்படுகிறது.மாணவ, மாணவியர் தங்கள் இலக்குகளில் கவனம் செலுத்த வேண்டும். இடைவிடாத முயற்சியும் திறமையான நேர நிர்வாகமும் வெற்றிக்கு மிகவும் அவசியம். படிப்பு, விளையாட்டு மற்றும் பிற செயல்பாடுகளுக்கு இடையே ஆரோக்கியமான சமநிலையை பராமரிப்பதே ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும்.மனஅழுத்தம் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவியருக்கு குறிப்பிட்ட அளவு மனஅழுத்தம் இயல்பானது தான். ஆனால், அதுவே தங்களைப் பற்றிய சந்தேகத்துக்கு வழிவகுக்கக் கூடாது.உங்களை நீங்களே நம்ப வேண்டும். பாடங்களை ஆழமாகப் புரிந்து கொண்டாலே போதும், தன்னம்பிக்கை தானாகவே வரும். மாணவ, மாணவியர் தங்கள் நேரத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த, தினமும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஒரு பட்டியலை தயாரிக்க வேண்டும்.இது, கல்விக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையிலும் மிகவும் உதவும் ஒரு பழக்கம். பள்ளி, கல்லூரி தேர்வுகள் தான் வாழ்க்கையின் இறுதி அளவுகோல் என நினைக்கக் கூடாது. பள்ளித் தேர்வுகளில் பெறும் வெற்றி மட்டுமே ஒருவரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என காலம் காலமாக நிலவும் மன நிலையை மாற்றவே பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்.சாத்தியமில்லை தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டியது அவசியம் என்றாலும், தேர்வு மதிப்பெண்களை விட தன்னம்பிக்கை, சிந்திக்கும் திறன் மற்றும் பாடங்களில் உள்ள தெளிவுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.அனைவருமே ஐ.ஐ.டி., அல்லது மருத்துவக் கல்லுாரிகளில் சேருவது சாத்தியமில்லை. அவசியமும் இல்லை. எழுத்தாளர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் உட்பட பல்வேறு திறமைகள் கொண்டோர் நாட்டுக்குத் தேவை.சமூக ஊடக பயன்பாட்டையும், ஆரோக்கியமற்ற ஒப்பீடுகளையும் மாணவ, மாணவியர் தவிர்க்க வேண்டும். உண்மையான திறமை இருந்தால் எந்தத் துறையிலும் வெற்றி பெற முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.