கல்விக்கு அதிக நிதி: வி.ஐ.டி., நிறுவனர் வலியுறுத்தல்
சென்னை: “மத்திய பட்ஜெட்டில், கல்விக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என, வி.ஐ.டி., நிறுவனர் கோ.விசுவநாதன் வலியுறுத்தி உள்ளார்.சென்னை வி.ஐ.டி., பல்கலையில், பல்கலை தினவிழா நடந்தது. கல்வியில் சிறந்த மாணவ, மாணவியருக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் பங்கேற்றவர்கள் பேசியதாவது:இந்தியன் வங்கி நிர்வாக இயக்குநர் பினோத்குமார்: இனி வரும் காலங்களில், ஏராளமான வாய்ப்புகள் உருவாக உள்ளன. அந்த வாய்ப்புகளை, மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.வி.ஐ.டி., சென்னையின் முன்னாள் மாணவர் மேஜர் வைபவ் சவுராசியா: மாணவர்கள் தங்கள் மீதோ, தங்கள் திறமையின் மீதோ, ஒருபோதும் சந்தேகம் கொள்ளக் கூடாது. எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கவில்லை எனில், மனம் தளராது, மீண்டும் முயற்சிக்க வேண்டும்.வி.ஐ.டி., நிறுவனர் கோ.விசுவநாதன்: கல்வியே உண்மையான செல்வம். யாரிடம் கல்வி இருக்கிறதோ, அந்த குடும்பம் உயரும். அந்த சமூகமும், மாநிலமும், நாடும் உயரும். நாம் முன்னேறிய தேசமாக இருக்க விரும்புகிறோம்.அதற்கு கல்வி இல்லாமல், சாத்தியமில்லை. நாம் சிறந்து விளங்கினால் தான், பொருளாதார ரீதியாக வளர்ந்த, பிற நாடுகளுடன் போட்டியிட முடியும்.சீனாவில் தனி நபர் வருவாய் 14,000 டாலராக இருக்கிறது. அதுவே, இந்தியாவில், 3,000 டாலராக உள்ளது. இதற்கு, நாம் கல்வியில் கவனம் செலுத்தாதது தான் காரணம். நாம் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 6 சதவீதத்தை கல்விக்காக செலவிட வேண்டும்.ஆனால், இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில், 2.5 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்விக்கு மத்திய அரசு அதிக நிதியை செலவிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.