புதுப்பாக்கம் அரசு சட்டக் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில், பட்டளிப்பு விழா நடந்தது.சிறப்பு விருந்தினராக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, சரவணன் ஆகியோர் பங்கேற்று 600 இளங்கலை மாணவ, மாணவியருக்கும், முதுகலை பயின்ற, 30 மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி, பாராட்டினர்.நீதிபதி ஜெகதீஸ் சந்திரா பேசியதாவது:நீதிமன்ற வழக்கறிஞர்களின் ஆடைகளுக்கு ஒரு மதிப்பு உண்டு. அதை எப்போதும் நாம் மரியாதையுடன் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மரியாதை என்பது பலவீனம் அல்ல; அது ஒரு கட்டுப்பாட்டுடன் கூடிய பலம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.பேசும் விதம், அமைதி, குரலின் விதம் இவை உங்களின் திறமையை வெளிப்படுத்துகிறது.நீதிமன்றத்தில் நாம் குரலை உயர்த்தி பேசி வாதாடினால், ஜெயித்து விடுவோம் என்று எண்ணிவிடாதீர்கள். அமைதியாக பேசி வாதாடி, வெற்றி பெற்ற விஷயங்கள் அதிகம் உள்ளன. சத்தமாக வாதாடினால் வெற்றி பெற முடியாது; சரியான முறையில் வாதாடினால் தான் வெற்றி பெற முடியும்.நாம் சட்டத்தை ஆழமாக படிக்க வேண்டும். தீர்ப்புகளை முழுமையாக வாசித்து தெரிந்திருக்க வேண்டும். நீதிமன்றத்தில் அதிகமாக வாதாடுவது கூட சில நேரத்தில் பலவீனத்தை ஏற்படுத்தும்.நேர்மையாக, உண்மையாக இருக்க வேண்டும். அப்போது தான் நீதிமன்றமும் நீதிபதிகளும் உங்களை நம்புவார்கள். பணம் படைத்தவர்களாக இருந்தாலும், எளியவர்களாக இருந்தாலும் மனிதர்களை மனிதர்களாக மதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு சட்டக்கல்வி இயக்குநர் கவுரி ரமேஷ், புதுப்பாக்கம் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் ஜெயகவுரி, பட்டறைப பெரும்புதுார் அரசு சட்டம் கல்லூரி முதல்வர் கயல்விழி, உட்பட பலர் பங்கேற்றனர்.