உள்ளூர் செய்திகள்

புதுமைப்பெண், தமிழ் புதல்வன் உதவித்தொகை வரவு வைப்பு

சென்னை: 'தமிழ் புதல்வன், புதுமைப் பெண்' திட்டத்தின் கீழ் பயனடையும் மாணவ மாணவியருக்கு, மே மாதத்துக்கான உதவித்தொகை 1,000 ரூபாய், அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.தமிழகத்தில் அரசு பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து, உயர்கல்வி சேரும் மாணவியருக்கு, புதுமைப் பெண் திட்டத்தின் வாயிலாக மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், 4.93 லட்சம் மாணவியர் பயனடைகின்றனர்.அதே போல், மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ், மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், 3.28 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர்.இந்த திட்டத்தை, தி.மு.க., அரசு கொண்டு வந்தது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, த.வெ.க., அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டம் தொடருமா என்ற கேள்வி எழுந்தது.இந்த சூழலில், தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் பேசும் போது, 'கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் தொடரும்' என, அறிவித்தார்.அதன்படி, கல்லுாரி மாணவ மாணவியருக்கான தமிழ் புதல்வன், புதுமைப் பெண் திட்டத்தில், மே மாத உதவித்தொகை 1,000 ரூபாய், நேற்று அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்