உள்ளூர் செய்திகள்

விரைவாக கடனுதவி வழங்க தொழில் முனைவோர் கோரிக்கை

சென்னை: 'சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், மூலப்பொருட்கள் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்பை எதிர்கொள்ள, மத்திய அரசு, அவசர கால கடன் உத்தரவாத திட்டத்தை விரைவாக தொடங்கி கடன் வழங்க வேண்டும்' என, தொழில் முனைவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, 'டான்ஸ்டியா' எனப்படும், தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத் தலைவர் வாசுதேவன் கூறியதாவது:கடந்த மார்ச்சில், மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட போர் காரணமாக, பெட்ரோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், தாமிரம், அலுமினியம், இரும்பு, பெட்ரோலிய பொருட்கள் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை, 50 சதவீதம் முதல், 100 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.இந்த விலை உயர்வால், 'ஆர்டர்' எடுத்த விலைக்கு, பொருட்களை உற்பத்தி செய்து தர முடியாமல், சிறு, குறு நிறுவனங்கள், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புதிய 'ஆர்டர்கள்' எடுப்பதற்கும், அதிக செலவாகிறது.கொரோனா தொற்று ஊரடங்கு காலத்தில், தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட சமயத்தில், மத்திய அரசின் உத்தரவால், அவசர கால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், வங்கிகளில் பிணையின்றி, அதிகளவு கடன்கள் வழங்கப்பட்டன.அதே போல், தற்போது, மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட போரால் பாதிக்கப்பட்ட குறு, சிறு நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், 2.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உத்தரவாத திட்டத்தை, கடந்த ஏப்ரலில், மத்திய அரசு பரிசீலித்தது. ஆனால், இன்னும் அத்திட்டம் தொடங்கப்படவில்லை.எனவே, மூலப்பொருட் கள் விலை உயர்வு பிரச்னையில் இருந்து, தொழில் நிறுவனங்கள் மீள்வதற்கு, கடன் திட்டத்தை விரைவாக தொடங்கி பிணை இல்லாமல், குறுகிய கால கடன், மூலப்பொருட்களுக்கான கடன்களை உயர்த்தி வழங்க, வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்