எய்ம்ஸ் மருத்துவ தேர்வில் கோவை மாணவர் முதலிடம்
அன்னுார்: 'எய்ம்ஸ்' உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கு, ஒவ்வொரு ஆண்டும், ஐ.என்.ஐ.எஸ்.எஸ்., என்னும் தேர்வு நடத்துகிறது. இந்த ஆண்டு தேர்வு கடந்த ஏப்., 25ல் நடந்தது. முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பு முடித்த 3,000க்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.நுரையீரல் மருத்துவம் சார்ந்த உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான தேர்வில், கோவை அன்னுார் முதுகலை மருத்துவ மாணவர் கோகுல், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து, 100க்கு, 77 மதிப்பெண் பெற்றுள்ளார்.இவர், கோவை பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லுாரியில் மருத்துவ பட்டப்படிப்பு படித்துள்ளார். தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் முதுநிலை மருத்துவ பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறார்.அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற மருத்துவ மாணவர் கோகுல் கூறுகையில், “நுரையீரல் மருத்துவம் சார்ந்த உயர் சிறப்பு மருத்துவ படிப்பு, டெல்லி, பீஹார், ஒடிசா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளது. டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேர திட்டமிட்டுள்ளேன்,” என்றார்.இவருடைய தந்தை கோவிந்தசாமி, சுகாதாரத் துறையில் மருத்துவம் சாரா வட்டார மேற்பார்வையாளராக அன்னுாரில் பணிபுரிகிறார். தாய் கவிதா பொகலுார் அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர். இவரது இளைய மகன் பரத்குமார். கடந்த ஆண்டு முதுநிலை மருத்துவ பட்டப் படிப்புக்கான 'நீட்' தேர்வில், தமிழகத்தில் முதலிடம் பெற்றார்.