தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பாடவாரியாக சிறப்பு பயிற்சி
கோவை: பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த, அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு, சிறப்புப் பயிற்சி முகாமை கல்வித்துறை நடத்துகிறது.பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த, ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக நிபுணர்கள் வாயிலாக பயிற்சி வழங்கப்படுகிறது. உயிரியல் மற்றும் தாவரவியல் பாட முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி, ரத்தினம் குளோபல் நிகர்நிலைப் பல்கலையில் நடந்தது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா கூறுகையில், “பயிற்சியில், பள்ளி மற்றும் பாடங்களின் சராசரி மதிப்பெண்களை உயர்த்தும் வழிமுறைகள், கடினமான பாடப்பகுதிகளை எளிமையாகக் கற்பிக்கும் நுட்பங்கள், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் மற்றும் சென்டம் பெற வழிகாட்டும் கற்பித்தல் குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கப்படுகிறது. தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும்,” என்றார்.