பெங்களூரில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களுக்கு தடை
பெங்களூரு: பெங்களூரில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பை கருதி, நகரில் குறிப்பிட்ட பகுதியில் கனரக வாகனங்கள் இயங்க, போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர்.பெங்களூரில் கடந்த 18ம் தேதி வர்த்துார் - குன்ஜுர் - ஒயிட்பீல்டு வழித்தடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பள்ளி முடிந்து வீட்டுக்கு மாணவர்களுடன் புறப்பட்ட பள்ளி பஸ்கள், இரண்டு மணி நேரம் சிக்கி தவித்தன. ஏற்கனவே காலை 07:00 முதல் 11:00 மணி வரை மட்டும் கனரக வாகனங்களுக்கு தடை விதித்த போதும், நெரிசலுக்கு தீர்வு காண முடியவில்லை.இதற்கு தீர்வு காண, போக்குவரத்து போலீசார் முன்வந்துள்ளனர். பள்ளி பஸ்கள், தடையின்றி செல்லவும், மூன்று புதிய கால அட்டவணையை அமல்படுத்தி உள்ளனர்.அதன்படி, வர்த்துார் - குன்ஜுர் - ஒயிட்பீல்டு பகுதியில், காலை 07:00 முதல் 11:00 மணி வரையிலும்; மதியம் 01:00 முதல் 03:00 மணி வரையிலும்; மாலை 04:00 முதல் இரவு 09:00 மணி வரையிலும் கனரக வாகனங்கள், லாரிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.பெங்களூரு போக்குவரத்து போலீசாரின் இந்த நடவடிக்கை, பரபரப்பான நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் இருந்து விமோசனம் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.