உள்ளூர் செய்திகள்

தமிழகத்தின் முதல் வெளிநாட்டு பல்கலைக்கு யு.ஜி.சி., ஒப்புதல்

சென்னை: 'தமிழகத்தின் முதல் வெளிநாட்டு பல்கலையான மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கு, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., ஒப்புதல் அளித்துள்ளது' என, தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.அந்நிறுவனத்தின் அறிக்கை:உலகளாவிய முதல், 100 பல்கலைகளில் ஒன்றாகவும், ஆஸ்திரேலியாவின், 'குரூப் ஆப் எய்ட்' அமைப்பின் உறுப்பினராகவும் திகழும், மேற்கு ஆஸ்திரேலிய பல்கலை, தன் சென்னை வளாகத்திற்கு, நம் நாட்டின் யு.ஜி.சி., அமைப்பின் ஒப்புதல் கடிதத்தை பெற்றுள்ளது.தமிழகத்தில் வளாகத்தை நிறுவும் முதல் வெளிநாட்டு பல்கலை என்ற பெருமையை, மேற்கு ஆஸ்திரேலிய பல்கலை பெற்றிருப்பது, தமிழகத்திற்கு ஒரு முக்கிய மைல்கல். இது, மாணவர்களுக்கு சென்னையிலேயே மேற்கு ஆஸ்திரேலிய பல்கலை கல்வி, உலகளாவிய கல்விசார் வலையமைப்புகள் மற்றும் தொழில் துறை அனுபவம் ஆகியவற்றை வழங்குகிறது. உயர் கல்விக்கான ஒரு புதிய உலகளாவிய மையத்தை, சென்னை வரவேற்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் சர்வதேச தரத்தில் உயர் கல்வி, தொழில்நுட்பம், ஆராய்ச்சி ஆகியவற்றின் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே, 870 ஏக்கரில் அறிவுசார் நகரை, 'டிட்கோ' நிறுவனம் அமைக்கிறது.தற்போது, மேற்கு ஆஸ்திரேலிய பல்கலையின் வளாகம், சென்னை வேளச்சேரியில் தனியார் வணிக வளாகத்தில் செயல்பட உள்ளது. இதை, அறிவுசார் நகரத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்