உளி மறந்த சிற்பம்... பிரம்பு மாயமான வகுப்பறை
ஒரு காலத்தில் வகுப்பறைக்குள் ஆசிரியர் நுழைந்தால் பயமும் மரியாதையும் கலந்திருக்கும். அவரது பிரம்படி கூட எதிர்காலத்தைச் செதுக்கும் உளியாக பார்க்கப்பட்டது. இன்றோ பள்ளிக்குள்ளேயே அடிதடி, மோதல் என மாணவர்கள் துணிச்சலாக இறங்குகின்றனர். வகுப்பறையில் குறையும் ஒழுக்கம் நாளைய சமூக சீர்கேட்டுக்கு அடித்தளமாகிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. கண்டிப்பும் அன்பும் கைகோர்க்க வேண்டிய தருணம் இது என்கின்றனர் கல்வியாளர்கள்.நீதிபோதனை வகுப்புகள்தியாகராஜன், ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு:தமிழகத்தில் இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களைக் கொண்ட 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளே ஏழை மாணவர்களின் ஆதாரம். ஆசிரியர்கள் தாக்கப்படுவதும், பொய் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாவதும் அதிகரித்துள்ளது. சரியான விசாரணையின்றி தற்காலிக பணிநீக்கம் செய்வதால், தவறை சுட்டிக்காட்டவே ஆசிரியர்கள் பயப்படுகின்றனர். மதிப்பெண்களை தாண்டி நீதிபோதனை, இசை, விளையாட்டு வகுப்புகளுக்கும், மன அழுத்தத்தை போக்க கலந்தாய்வு மையங்களுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும்.எச்சரிக்கைப் பலகைபழனிசாமி, தலைவர், தலைமையாசிரியர்கள் சங்கம்:தபால் நிலையம், வங்கி போல அரசு பள்ளியிலும் அரசு ஊழியரை தாக்கினால் மூன்றாண்டு சிறை என்ற எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். பெற்றோர் வகுப்பறை வரை செல்வதை கட்டுப்படுத்த வேண்டும். பள்ளி வளாகத்தை நடைபயிற்சிக்கு பயன்படுத்த தடை விதிக்கும் போது பொய் புகார்கள் மூலம் மோதல்கள் உருவாக்கப்படுகின்றன. நேர்மையான ஆசிரியர்களுக்கு சட்டப்பூர்வ பணிப்பாதுகாப்பு வேண்டும்.கரங்கள் கட்டப்பட்டுள்ளனகோபாலகிருஷ்ணன், கோட்டச் செயலாளர், தேசிய ஆசிரியர் சங்கம்:ஆசிரியர்களின் கரங்கள் கட்டப்பட்டுள்ளன. அடிக்கவோ தண்டிக்கவோ கூடாது என்பதால் பயமும் மரியாதையும் குறைந்துவிட்டது. எட்டாம் வகுப்பு வரை அனைவரையும் தேர்ச்சி பெறச் செய்யும் 'ஆல் பாஸ்' முறையால் பலர் படிப்பதில்லை. ஒன்பதாம் வகுப்பில் பொதுத்தேர்வுக்கு தயார்படுத்துவது சிரமமாகிறது. கற்றல் குறைபாட்டை சுட்டினால் எதிர்ப்பு வருகிறது. கண்டிப்பும் அன்பும் கலந்த போதனையே தீர்வு.நேர்மறை கண்ணோட்டம் பெற்றோருக்கே பொறுப்புவனிதாமணி, தன்னம்பிக்கை பேச்சாளர்:பெற்றோர் தான் முதல் கண்காணிப்பாளர். இன்று மாணவர்கள் செல்போனிலும் தொலைக்காட்சியிலும் வன்மம் நிறைந்த காட்சிகளையே அதிகம் பார்க்கின்றனர். பார்ப்பதை போலவே எதிர்வினையும் அமையும். கோபத்தை எப்படி கையாள வேண்டும் என்பதை பெற்றோரிடம் இருந்தே கற்கின்றனர். சினிமா நிஜமல்ல என்பதை புரியவைத்து, நேர்மறை கண்ணோட்டத்தை உருவாக்கும் பொறுப்பு பெற்றோரிடமே உள்ளது.