உள்ளூர் செய்திகள்

அமெரிக்கா செல்கிறார் ராகுல்; பல்கலை மாணவர்களுடன் கலந்துரையாடல்

புதுடில்லி: அமெரிக்காவுக்கு அடுத்த வாரம் சுற்றுப்பயணம் செல்லும் காங்கிரசை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், அங்குள்ள பல்கலைகளில் சர்வதேச அரசியல் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.இது குறித்து, காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு பிரிவு தலைவரும் ராகுலுக்கு நெருக்கமானவருமான சாம் பிட்ரோடா கூறியதாவது:ராகுலின் அமெரிக்க பயணத்தின் போது, இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இம்மாதம் 17ல் கொலம்பியா பல்கலையில் நடைபெறும் கலந்துரையாடலில், உலகளவில் வளர்ந்து வரும் மாணவர் இயக்கங்கள் குறித்து அவர் பேச உள்ளார். மாணவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், சுற்றுச்சூழல் தொடர்பான கோரிக்கைகள், ஜனநாயகத்தில் மாணவர் இயக்கங்களின் தாக்கம், இந்தியாவில் அவற்றின் நிலை ஆகியவை குறித்து விவாதிக்கப்படும்.அடுத்ததாக, இம்மாதம் 18ல், சிகாகோ பல்கலையில், சர்வதேச அரசியல் துறையில் புகழ்பெற்ற பேராசிரியர் ராபர்ட் பேட் உடன் ராகுல் கலந்துரையாட உள்ளார். மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் சூழல், ஈரான் போர், உலக அரசியல் மாற்றங்கள் குறித்து இந்த விவாதம் அமையும். உள்நாட்டு பிரச்னைகளை ராகுல் வெளிநாடுகளில் எழுப்புவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது; இது, தவறான வாதம்.உலகின், 800 கோடி மக்களும் ஒன்றோடொன்று இணைந்திருக்கின்றனர். இதில் உள்ளூர் என்று எதுவுமே இல்லை. உள்ளூர் நிகழ்வுகள் உலகளாவிய நிகழ்வுகளாகவும், உலகளாவிய நிகழ்வுகள் உள்ளூர் நிகழ்வுகளாகவும் மாறுகின்றன. எனவே, தகவல்களை மறைத்து வைக்க முடியாது. இந்தியாவில் பேசும் ஒரு விஷயத்தை வெளிநாடுகளில் பேசலாம்.அங்கொன்றும், இங்கொன்றுமாக சொல்லக்கூடாது; அப்படிச் சொல்வது சரியாக இருக்காது. வெளிநாடுகளில் சென்று பேசுவது இந்தியாவை அவமதிப்பதாக கருதப்படுவது முற்றிலும் ஆதாரமற்றது. சில கருத்துகளை வெளிநாட்டில் கூறுவதால், 150 கோடி மக்கள் கொண்ட நாட்டை அவமதித்துவிட முடியாது.ஜனநாயகம் உலகின் பொதுச் சொத்து. உலக நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து தொடர்பில் இருப்பது நமது தார்மீக பொறுப்பு. ராகுல் ஒரு இளம் தலைவர்; சர்வதேச தலைவரும் கூட. இதனால், வெளிநாடுகளுக்கு அவர் செல்வதில் தவறில்லை.இவ்வாறு அவர் கூறினார்.காங்கிரஸ் எம்.பி., ராகுல், வெளிநாடுகளுக்கு சென்று நம் நாட்டின் முக்கிய விஷயங்களை விவாதிப்பதாகவும், இந்தியா குறித்து அவதூறாக பேசுவதாகவும் பா.ஜ., தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. மத்திய அரசுக்கு எதிராக கரப்பான்பூச்சி கட்சி மற்றும் மாணவர் இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தி வரும் சூழலில், அமெரிக்காவில் இது தொடர்பான விவாதத்தில் ராகுல் பங்கேற்க இருப்பது கவனம் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்