தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, ஆறு சட்டசபை தொகுதிகளில், நேற்று பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, கட்டுரை, வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு கட்டுரை, வினாடி-வினா போட்டிகள், அந்தந்த சட்டசபை தொகுதிகளில் நடத்தப்படுகிறது.நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கான கட்டுரை, வினாடி - வினா போட்டிகள் நடந்தன. நாமக்கல் சட்டசபை தொகுதிக்குட்பட்ட நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டிக்கு, ஆர்.டி.ஓ., சாந்தி தலைமை வகித்து துவக்கி வைத்தார். தாசில்தார் அருள், தேர்தல் பிரிவு தனி தாசில்தார் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், 8 கல்லுாரி மாணவ, மாணவியர், 39 பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். போட்டியில், நான்கு மாணவர்கள் கல்லுாரி அளவிலும், ஆறு பேர் பள்ளி அளவிலும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்கள், இம்மாதம் நடக்கும் மாவட்ட அளவிலான கட்டுரை, வினாடி - வினா போட்டிகளில் பங்கேற்பர். இதில் வெற்றி பெறுபவர்கள், சென்னையில் நடக்கும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வர். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்கள், டில்லியில் நடக்கும் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர்.நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் பாரதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அப்துல் வஹாப், தேர்தல் துணை தாசில்தார் சவுண்டேஸ்வரி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் திருஞானம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.