மாணவர்களுக்கு திருக்குறள் போட்டி; பல்கலைகளுக்கு யு.ஜி.சி., அறிவுறுத்தல்
சென்னை: 'காசி தமிழ் சங்கமம் 5.0' திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு திருக்குறள் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில், மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்க, பல்கலைகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.தமிழகத்துக்கும், காசிக்கும் இடையிலான, பல நுாற்றாண்டு கால நாகரிக பிணைப்புகளைக் கொண்டாடும் வகையில், மத்திய கல்வித்துறை சார்பில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி, கடந்த 2022ம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது.இந்தாண்டு, 'காசி தமிழ் சங்கமம் 5.0' நிகழ்ச்சி, வரும் நவ., 28ம் தேதி தொடங்கி, டிச., 12ம் தேதி வரை நடக்கிறது. நடப்பாண்டு, 'திருக்குறள் கற்போம்' என்ற கருப்பொருளுடன் நிகழ்ச்சி நடக்கிறது. நாடு முழுதும் உள்ள மாணவர்களுக்கு, திருக்குறளின் ஆழமான கருத்துகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், இந்த கருப்பொருள் அமைக்கப்பட்டுள்ளது.இதன்படி, திருக்குறள் போட்டிகள் வழியே, 1,000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். திருக்குறள் போட்டிகளில் பங்கேற்க, மாணவ, மாணவியரை பல்கலைகள் ஊக்குவிக்க வேண்டும் என, யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது. மாணவர்கள் www.kts.cict.in என்ற இணையதளத்தில் விபரங்களை அறியலாம்.