கல்வி உரிமை சட்டம் குறித்து கருத்து சொல்லுங்க...
மதுரை: குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் பற்றி பொதுமக்கள் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான வரைவு விதிகள் தமிழ் வழியில் தயார் செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளன. கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட அனைத்து தரப்பினரும் இச்சட்ட வரைவு பற்றிய கருத்துக்கள், ஆலோசனைகளை பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்கலாம். இதற்காக அவ்விதிமுறைகள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களிலும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய கருத்தை ஜனவரி இறுதிக்குள், ‘இணைஇயக்குனர் (மேல்நிலை கல்வி), பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை-6’ என்ற முகவரிக்கு தபால் மூலமோ, jdhssed@nic.in என்ற முகவரிக்கு இ மெயில் மூலமோ அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வரைவு விதிகளில், ஒரு பள்ளியின் நிர்வாகக்குழு, சிறப்பு பயிற்சி தேவைப்படும் சிறுவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இப்பயிற்சி வகுப்புகளில் அல்லது பாதுகாப்பான தங்குமிடங்களில் அளிக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் அல்லது சிறப்பாக நியமிக்கப்பட்ட ஆசிரியரால் நடத்தப்பட வேண்டும். இப்பயிற்சி குறைந்தது மூன்றுமாத காலமாக அமைய வேண்டும். சிறுவர்கள் வயதுக்கு பொருத்தமான வகுப்பில் சேர்க்கப்பட்டு, சிறப்பு பயிற்சியை முடித்தபின், மற்ற மாணவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் அவர் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதுபோன்று பள்ளியின் எல்லைகள், கல்வி அதிகார உள்ளூர் மன்றத்தின் கடமைகள், நலிந்த பிரிவு மற்றும் வசதி வாய்ப்பு அற்ற குழந்தைகளின் பள்ளிச் சேர்க்கை, ஆசிரியர்கள், மாணவர்கள், சான்று அளித்தல், குழந்தைகள் உரிமை பாதுகாப்பிற்காக மாநில ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை பற்றி பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.