தனியார் கல்வி நிறுவனங்களில் இ.எஸ்.ஐ., வசதி கிடைக்குமா
திருச்சி: தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் (இ.எஸ்.ஐ.,), குறைந்தபட்சம் 20 ஊழியரைக் கொண்ட தனியார் பள்ளி, கல்லூரிகள் மட்டுமே சேர்க்கப்படுவர் என்ற விதியால், பல கல்வி நிறுவன ஊழியர்கள் பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விதியை தளர்த்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. இ.எஸ்.ஐ.,யில், 15 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் பெறும் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்படுகின்றனர். உற்பத்தித் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர் மட்டுமே, இ.எஸ்.ஐ., உறுப்பினராக முடியுமென்ற நிலை இருந்தது. தனியார் சுயநிதி பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பணிபுரிபவர்களையும் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் ஐகோர்ட், தனியார் சுயநிதி பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்களை உறுப்பினராக சேர்க்க அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து, தமிழகத்திலுள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகள், தனியார் கல்லூரிகளின் பணிபுரியும் ஆசிரியர், அலுவலக பணியாளர் உட்பட வருகைப் பதிவேட்டில் உள்ள அனைத்து பணியாளர்களையும் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து இ.எஸ்.ஐ., கிளை அலுவலகங்கள் மூலம், சி.இ.ஓ., மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், மண்டல கல்லூரி கல்வி இயக்குனர் போன்ற அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், பள்ளி, கல்லூரிகளுக்கு, அவர்களது ஊழியர்களை இ.எஸ்.ஐ., உறுப்பினராக சேர்ப்பது குறித்து அறிவுறுத்தியுள்ளது. கல்வி நிறுவனங்கள் முதலில் தங்களது நிறுவனத்தை இ.எஸ்.ஐ.,யில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அதன்பின்பே, ஊழியர்களை உறுப்பினராக்க முடியும். பதிவு செய்வதற்கு, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம், குறைந்தபட்சம் 20 பணியாளர்களை வருகைப் பதிவேட்டில் கொண்டிருக்க வேண்டும் என, விதி வகுக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளைப் பொறுத்தவரை பெரும்பாலும் 20க்கும் அதிகமான பணியாளர்கள் இருப்பர் என்பதால் பிரச்னை வராது. ஆனால், ஐந்தாம் வகுப்பு வரையுள்ள தனியார் பள்ளிகள், சிறிய அளவிலான மெட்ரிக் பள்ளிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ஐ.டி.ஐ., போன்ற கல்வி நிறுவனங்களில் பெரும்பாலும் 20க்கும் குறைவான பணியாளர்கள் பணிபுரிகின்றனர். தமிழகம் முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட சிறிய பள்ளிகளில், பணிபுரிபவர்கள் பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இ.எஸ்.ஐ., கிளை அலுவலகங்களில் விசாரிக்கும் பல கல்வி நிறுவன நிர்வாகத்தினர், 20க்கும் குறைவான பணியாளர்களைக் கொண்டிருப்பதால், தங்களது பணியாளரை உறுப்பினராக சேர்க்க முடியாதது குறித்து அறிந்தனர். கிடைத்த வாய்ப்பும் பறிபோய்விட்டதை நினைத்து கல்வி நிறுவன பணியாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். குறைந்தபட்சம் 20 பணியாளர் இருக்க வேண்டுமென்ற விதியை வைத்து உறுப்பினர்களை சேர்த்தால், இ.எஸ்.ஐ.,யில், கல்வி நிறுவன பணியாளர்களை சேர்க்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதன் நோக்கமே நிறைவேறாமல் போய்விடும் என, தொழிலாளர் சங்கங்கள் தெரிவிக்கின்றன. எனவே, இ.எஸ்.ஐ., நிர்வாகமும், தமிழக அரசும் இவ்விதியை மாற்றி, 20க்கும் குறைவானோரை கொண்ட நிறுவன பணியாளர்களும், இ.எஸ்.ஐ.,யில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. திருச்சி கிளை இ.எஸ்.ஐ., அலுவலக மேலாளர் செல்வி கூறுகையில், "இ.எஸ்.ஐ., விதிப்படி, குறைந்தபட்சம் 20 பணியாளர்களைக் கொண்ட தனியார் சுயநிதி பள்ளி, கல்லூரிகளை மட்டும் பதிவு செய்து, அவர்களது பணியாளர்களை உறுப்பினராக சேர்க்கிறோம். 20க்கும் குறைவான பணியாளர்களை கொண்ட பல பள்ளிகளில் இருந்து விசாரிக்கின்றனர். ஆனால், அவர்களை எங்களால் உறுப்பினராக சேர்க்க முடியவில்லை. விதிகளை திருத்துவது, மாற்றுவது இ.எஸ்.ஐ., மற்றும் அரசின் கையில் தான் உள்ளது,&'&' என்றார்.