உள்ளூர் செய்திகள்

விவசாய பட்டதாரிகள் நியமனம் கிடப்பில் போடப்பட்ட உத்தரவு

சின்னமனூர்: விவசாய பிரிவு பட்டதாரிகளை அரசு மேல்நிலைப் பள்ளிகளில், தொழில்கல்வி ஆசிரியர்களாக நியமிக்க உத்தரவிடப்பட்ட அரசாணை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் 16 ஆயிரம் பேர் வேலையில்லாமல் தவிர்த்து வருகின்றனர். விவசாய துறையில் நான்கு வருட பி.எஸ்.சி., அக்ரி படிப்பு உள்ளது. இந்த பட்டதாரிகளுக்கு விவசாய துறையில் மட்டுமே வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டு வந்தது. 1999 க்கு பிறகு விவசாய துறையில் பணியிடங்கள் காலி இல்லாத நிலை ஏற்பட்டது. எனவே இப்பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு தர முடியவில்லை. 2001 க்கு பின் இத்துறையின் பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி.,மூலம் நிரப்பப்படுகின்றன. எனவே, இந்த பட்டதாரிகளை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்கல்வி ஆசிரியர்களாக நியமிக்க அரசு முடிவு செய்து, 2002 ல் புதிய அரசாணையும் வெளியிடப்பட்டது. அதன்படி வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரில் ஆண்டுக்கு 100 பேரை மாநிலம் முழுவதும் உள்ள, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்கல்வி பிரிவில், விவசாய ஆசிரியர்களாக நியமனம் செய்து கொள்ளலாம் என, கூறியிருந்தது. அந்தாண்டில் மட்டும் அரசாணைப்படி 100 பேர் நியமிக்கப்பட்டனர். பின் நான்கு ஆண்டுகளாக அந்த அரசாணை நடைமுறைப்படுத்தப்படவில்லை. பின் 2007, 2008 ல் தலா 100 பேர் வீதம் நியமிக்கப்பட்டனர். அதன் பின் தற்போது வரை அந்த அரசாணை கிடப்பில் போடப்பட்டுள்ளது. அரசின் உத்தரவுப்படி இது வரையிலும் மாநிலம் முழுவதும் 900 பேர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். 300 பேர் மட்டுமே நியமிக்கப் பட்டுள்ளனர். இதனால், வேறு துறைக்கு பணிக்கு செல்ல முடியாத இப்பட்டதாரிகள் 16 ஆயிரம் பேர், தமிழகம் முழுவதும் வேலையின்றி தவிர்த்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்