யு.பி.எஸ்.சி. கேள்வித்தாளை விமர்சிக்கும் இந்திய வரலாற்று காங்கிரஸ்
இந்திய வரலாறு தொடர்பாக யு.பி.எஸ்.சி. தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் தரமாக இருப்பதில்லை என்று இந்திய வரலாற்று காங்கிரஸ்(ஐ.எச்.சி) விமர்சித்துள்ளது. இந்த மாதம் 11 முதல் 13 ம் தேதி வரை மேற்கு வங்க மாநிலம் கவுர்பங்கா பல்கலைக்கழகத்தில் நடந்த இந்திய வரலாற்று காங்கிரசின் 71 வது வருடாந்திர மாநாட்டில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் ஐ.எச்.சி. அமைப்பிற்கான தலைவர் மற்றும் பிரிவு வாரியான தலைவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பண்டைய இந்தியா, இடைக்கால இந்தியா, நவீன இந்தியா, சமகால இந்தியா, இந்தியா தவிர்த்து பிற நாடுகள் மற்றும் தொல்பொருளியல் உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளன. தெற்கு ஆசியாவைச் சேர்ந்த நிபுணத்துவம் பெற்ற வரலாற்று அறிஞர்களைக் கொண்ட இந்த ஐ.எச்.சி. அமைப்பின் மாநாட்டில் மொத்தம் 900 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மேலும் 600 ஆய்வு பேப்பர்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த மாநாடு 2 முக்கிய தீர்மானங்களை இயற்றியது. அவை, * யு.பி.எஸ்.சி. தேர்வின் பொது பாடங்கள் பிரிவு கேள்வித்தாளில், இந்திய வரலாறு சம்பந்தமாக கேட்கப்படும் கேள்விகள் முறையாக வடிவமைக்கப்படுவதில்லை. மாணவர்களின் வரலாற்று அறிவை சோதிக்க கேட்கப்படும் கேள்விகள், அங்கே-இங்கே கிடைக்கும் புத்தகங்களில் இருந்து பெயரளவிற்கு தயாரிக்கப்படாமல், தரமாகவும், சிறப்பாகவும் இருக்க வேண்டும். * தேசிய ஆவணக் காப்பகத்திற்கு அடுத்து நாட்டின் முக்கிய நிறுவனமாக திகழும் நேரு நினைவு மியூசியம் மற்றும் நூலகத்தின்(என்.எம்.எம்.எல்) விதிமுறைகள்(பை-லாஸ்) மாற்றப்பட்டுள்ளதானது விமர்சனத்திற்கு உரியது. என்.எம்.எம்.எல். அமைப்பிற்கு நவீன இந்திய வரலாற்றில் நல்ல அறிவுடைய ஒரு பெயர்பெற்ற இயக்குனர் தேவை. மேலும் நவீன இந்திய வரலாறு என்ற பெயர்கொண்ட பாடத்தை சமூக அறிவியல் என்று பெயர் மாற்றம் செய்தது துரதிஷ்டவசமானது. இத்தகைய இரண்டு முக்கிய தீர்மானங்களை ஐ.எச்.சி. மாநாடு நிறைவேற்றியுள்ளது. மேலும் நேரு நினைவு மியூசியம் மற்றும் நூலகத்தின் மாற்றப்பட்ட விதிமுறைகள் ரத்துசெய்யப்பட வேண்டுமெனவும் இந்த மாநாடு இந்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது.