மாணவர் நடவடிக்கை குறித்து பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்., தகவல்
பொள்ளாச்சி: ‘மாணவர்களின் நடவடிக்கையை, எஸ்.எம்.எஸ்., மூலமாக பெற்றோர் தெரிந்து கொள்ளும் வசதியை, கோவை அண்ணா பல்கலைக் கழகம் விரைவில் ஏற்படுத்தும்’ என, துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா ஆகஸ்ட் 11ம் தேதி நடந்தது. விழாவில், கோவை அண்ணா பல்கலை துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தமிழகத்தில், 350 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், கோவை அண்ணா பல்கலை கட்டுப்பாட்டில், எட்டு மாவட்டங்களில் 101 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளையும், பல்கலைக்கழகத்தையும் மேம்படுத்த, பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளன. அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் முதல் கட்டமாக, இணையதள இணைப்பு ஏற்படுத்தப்பட்டு, கல்லூரிகள், பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட உள்ளன. இதன் மூலம் ஒரு கல்லூரியில் இருக்கும் புள்ளி விவரங்கள், மற்ற கல்லூரிகளுக்கு பரப்ப முடியும். இணையதளத்தில், பல்கலைக் கழகம், கல்லூரி, மாணவர்கள் குறித்த அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்படும். இந்த இணையத்தளத்தை பெற்றோர் பயன்படுத்தி, மாணவர்களின் நடவடிக்கையை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம். மாணவர்களின் வருகை உள்ளிட்ட தகவல்கள் எஸ்.எம்.எஸ்., மூலம் பெற்றோருக்கு தெரியப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள் வசதிக்காக, பல்கலை கட்டுபாட்டின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் ஒரே வகையான பாடத்திட்டம் ஏற்படுத்தப்பட உள்ளது. தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான வினாத்தாளை அச்சு முறையில் பதிப்பு செய்வதால், ஏற்படும் காலவிரயத்தை தவிர்க்க, ‘டிஜிட்டல்’ முறை வினாத்தாள் கொண்டு வரப்பட உள்ளது. கம்ப்யூட்டரில் வினாத்தாள் பதிவு செய்யப்பட்டு, தேர்வுக்கு 10 நிமிடத்திற்கு முன், வினாத்தாளை நகல் எடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. 2010ம் ஆண்டில் ‘ஆன்-லைன்’ மூலம் மாணவர்கள் தேர்வு எழுத வசதி செய்து தரப்படும். அதற்குள் மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில், ‘உள்மதிப்பீட்டு’ முறையில் மாணவர்கள் எளிதில் மதிப்பெண் பெற வசதியாக, பல்கலைக்கழகமே மாணவர்களுக்கு புத்தகம் வழங்க உள்ளது. கோவை அண்ணா பல்கலைக்கழகம், மாணவர்களுக்கு எப்போதும் வேலைவாய்ப்பு சார்ந்த கல்வியை வழங்காது. தன்னம்பிக்கை சார்ந்த கல்வியை மட்டுமே வழங்கும். தற்போது பொறியியல் கல்லூரிகள் அதிகளவில் கட்டணம் வசூலிப்பதாக தவறான கருத்து நிலவி வருகிறது. கல்லூரிகளில், மாணவர்களுக்கு படிப்போடு, வேலைவாய்ப்புக்கு தேவைப்படும் கூடுதல் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதற்காகவே, மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் பெறப்படுகிறது. இதை பெற்றோர் நன்கு புரிந்து கொண்டு, நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு துணைவேந்தர் பேசினார்.