பள்ளி ஆசிரியர்களின் கொடுஞ்செயல்கள் பற்றி விரிவான விசாரணை
சென்னை: ஆசிரியர்களால், பள்ளி மாணவர்கள், முறைகேடாக பயன்படுத்தப்படுவது பற்றிய ஒரு விரிவான விசாரணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக, பொருத்தமான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களையும் 3 மாதங்களுக்குள் வழங்கும்படி கூறியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வி.ஜி. தனசேகரன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் அடங்கிய பென்ச், இந்த உத்தரவை வழங்கியது. இந்த மனுவில், "பள்ளிகளில், ஆசிரியர்கள், மாணவர்களை(குறிப்பாக கிராமப்புற மாணவர்கள்) முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் ஒரு செயல்திட்டத்தை வகுக்குமாறு தமிழக அரசிற்கு உத்தரவிட வேண்டும். மேலும் அரசு அலுவலர்கள் அல்லாத தனி கமிட்டிகளை மாவட்ட அளவில் அமைத்து, இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது. தமிழகத்தின் பல பள்ளிகளில், ஆசிரியர்கள், தங்களின் வீட்டு கழிவறைகளை கழுவுதல் மற்றும் தங்களின் வாகனங்களை சுத்தப்படுத்துதல் போன்ற வேலைகளை செய்ய, தங்களின் மாணவர்களை பயன்படுத்தும் மோசமான செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் டீ மற்றும் தின்பண்டங்கள் வாங்கி வருவதற்கும் மாணவர்களை கட்டாயப்படுத்துகின்றனர். அவற்றை செய்யமறுக்கும் மாணவர்களை அடிக்கின்றனர். இதுபோன்ற முறைகேடுகள் தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டுள்ள போதிலும், எந்தவித முறையான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று பலவிதமான குற்றச்சாட்டுகளை மனுதாரர் சுமத்தியுள்ளார். எனவே, இந்த மனுவின் முக்கியத்துவத்தை உணர்ந்த நீதிமன்றம், இந்த கொடுஞ்செயல்கள் பற்றி விரிவான விசாரணை நடத்த, தொடக்க கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்களின் இதுபோன்ற அறிவற்ற செயல்களால், நம் நாட்டிலுள்ள ஆசிரியர் கல்வியானது, பல நல்ல மாறுதல்களுக்கு உட்பட வேண்டும் என்று பல சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.