உள்ளூர் செய்திகள்

ஏழை பொறியியல் மாணவிக்கு கிடைத்த கல்வி உதவி

தஞ்சை என்ஜினியரிங் கல்லூரி மாணவி கல்விக்கு உதவும் வகையில், மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி கே. வெங்கட்ராமன் மற்றும் வக்கீல்கள் சார்பில் 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் நஞ்சுக்கோட்டையில் பரிசுத்தம் இன்ஜினியரிங் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மாணவி சத்யா (21). இவர், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: எனது தந்தை ரவிச்சந்திரன் விவசாய கூலி. மிக சிரமப்பட்டு 50 ஆயிரம் ரூபாய் கல்லூரி கட்டணம் செலுத்தினார். 4 செமஸ்டர் தேர்வுகளை எழுதினேன். 5 வது செமஸ்டருக்கான கட்டணம் கட்ட இயலவில்லை. இந்தியன் வங்கியில் கல்விக்கடன் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. எனினும், முறையாக கல்லூரிக்கு சென்றேன். ஆனால், எனக்கு வருகை பதிவேட்டில் கல்லூரி நிர்வாகம் "ஆப்சென்ட்&' செய்தது. எனினும், 5 வது செமஸ்டர் தேர்வு எழுதினேன். ஆனால், நான் தேர்வு எழுதவில்லை என, கல்லூரி நிர்வாகம் "ஆப்சென்ட்&' செய்தது. கல்லூரி கட்டணம் 59 ஆயிரத்து 970 ரூபாய் செலுத்தும்படி, கல்லூரி நிர்வாகம் கூறியது. வங்கி கடனாக 37 ஆயிரம் ரூபாய் மட்டும் கிடைத்தது. முழு தொகையையும் கட்டும்படி நிர்வாகம் கூறுகிறது. ஏழ்மையில் தவிக்கும் என்னை தேர்வு எழுத அனுமதிக்க நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என, கோரியிருந்தார். இம்மனு நீதிபதி கே. வெங்கட்ராமன் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை பொறுத்தவரை, மாணவி முதல் ஆண்டில் 7,879 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். 2 வது ஆண்டுக்கு 59 ஆயிரத்து 970 ரூபாய் செலுத்த வேண்டும். வங்கியில் இருந்து 37 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கியுள்ளது. பாக்கி தொகையை செலுத்த கல்வி உதவித்தொகை வழங்குவது தொடர்பாக பரிசீலிப்பதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாணவியின் பரிதாப நிலையை பார்த்து, அவர் தொடர்ந்து ஐந்து, ஆறு, 7வது செமஸ்டர் மற்றும் செய்முறை தேர்வுகளை எழுதவும், அவரை கல்லூரியில் மீண்டும் சேர்த்து கொள்ளவும் கல்லூரி முதல்வர், திருச்சி அண்ணா பல்கலை துணை வேந்தர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தரவிட்டார். சத்யாவின் நிலை கருதி கல்வி உதவிக்கு தங்களது பங்களிப்பாக நீதிபதி, வக்கீல்கள் அஜ்மல்கான், லஜபதிராய், வீர கதிரவன், ஐசக்மோகன்லால் ஆகியோர் தலா 10,000 ஆயிரம் ரூபாயும், அரசு வக்கீல்கள் ராஜசேகரன், ஹெரால்டுசிங், வக்கீல்கள் சுவாமிநாதன், மகேந்திரன், விஸ்வலிங்கம் ஆகியோர் தலா 5,000 ரூபாய் என, மொத்தம் 75 ஆயிரம் ரூபாய் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்