ஆன்லைன் விளையாட்டுகளுக்கு புதிய விதிகள்: மே 1 முதல் அமல்
புதுடில்லி: மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், 'ஆன்லைன்' விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டத்தை செயல்படுத்துவதற்கான நடைமுறை விதிகளை வெளியிட்டுள்ளது. இது மே 1 முதல் அமலுக்கு வருகிறது.மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் இது குறித்து வெளியிட்ட அறிக்கை: 'ஆன்லைன்' விளையாட்டுகளைக் கண்காணிக்கவும், ஒழுங்குபடுத்தவும் பிரத்யேகமான, 'ஆன்லைன்' விளையாட்டு ஆணையம் உருவாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.ஆன்லைன் விளையாட்டுகளுக்கான ஒழுங்குமுறைகளை எளிமையாக வைத்திருக்கவே அரசு விரும்புகிறது. இதன்படி, பணம் சம்பந்தப்படாத ஆன்லைன் சமூக விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்கள், இந்த ஆணையத்தில் பதிவு செய்வது கட்டாயமில்லை.'இ-ஸ்போர்ட்ஸ்' எனப்படும், மின்னணு கருவிகளை கொண்டு விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்கள் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஏற்கனவே சட்டப்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக விளையாட்டுகள் மற்றும், 'இ-ஸ்போர்ட்ஸ்' ஆகியவற்றை ஊக்குவிக்க இந்த விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.