உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளிகளில் கம்ப்யூட்டர் கல்வி கற்றுத்தர 10 லட்சம் பேர்

இதற்காக, புதிதாக பத்து லட்சம் ஆசிரியர்கள் நியமனம் செய்யவும் முடிவு எடுக்கப் பட்டுள்ளது.மத்திய அமைச்சரவைக் கூட்டம்  டில்லியில் பிரதமர் மன்மோகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத் திற்கு பிறகுநிருபர்களிடம் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச் சர் கபில் சிபல் கூறியதாவது:நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு மானியம் பெறும் ஒரு லட்சத்து எட்டாயிரம் பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த பள்ளிகளில் பாடங்களை இனிமேல் கம்ப்யூட்டர் வாயிலாகவே கற்றுத்தர முடிவு செய்யப் பட்டுள்ளது. கம்ப்யூட்டர் கல்வி என்பது மிகவும் அத்தியாவசியம் என்பதால் இந்த முடிவு எடுக்கப் பட்டது. ஏற்கனவே 53 ஆயிரம் பள்ளிகளில் 2005 - 06ம் ஆண்டுகளில் கம்ப்யூட்டர் மூலம் கல்வி கற்கும் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. இது மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் இந்த திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளது.பதினோராவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் இந்த திட்டத்திற்கு ஆறாயிரத்து 926 கோடி ரூபாய் தேவை. இதில் அரசாங்கம் தரப்பில் ஆறாயிரம் கோடி ரூபாய் அளிக்கப்படவுள் ளது. இதில் 75 சதவீதத்தை மத்திய அரசும், 25 சதவீதத்தை மாநில அரசும் ஏற்க உள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் 90 சதவீதத்தை மத்திய அரசும், 10 சதவீதத்தை மாநில அரசுகளும் ஏற்றுக் கொள்ளும். முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஆகும் திட்டச் செலவு முழுவதையும் மத்திய அரசே ஏற்றுக் கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக பத்து லட்சம் ஆசிரியர்கள் புதிதாக தேர்வு செய்யப்படவுள்ளனர். எல்லா மொழிகளையும் உள்ளடக்கி முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். ஏற்கனவே பணியாற்றுபவர்களுக்கும் பயிற்சி அளித்து நியமிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. கம்ப்யூட்டர் கல்வியறிவு நாடு முழுவதும் ஒரே சீராக இல்லாமல் இருக்கிறது. ஒருசில பகுதிகளில் மட்டும் அதிக அளவிலும், ஒரு சில பகுதிகளில் கம்ப்யூட்டர் கல்வி அறிவு அறவே இல்லாமலும் இருந்து வருகிறது. இதை, இந்த திட்டம் சரிப்படுத்தும் என்று அரசு நம்புகிறது. இவ்வாறு கபில் சிபல் கூறினார்.இந்த திட்டம் குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: நாடு முழுவதும் ஒரே சீராக கம்ப்யூட்டர் கல்வியறிவை கொண்டு வரப்போவதாக அமைச்சர் கூறினார். அப்படிப் பார்த்தால் தென்மாநிலங்களில் குறிப்பாக தமிழகம் போன்ற மாநிலங்களில்தான் கம்ப்யூட்டர் கல்வியறிவு அதிகமாக உள்ளது. இப்போது இதுபோன்ற திட்டத்தை கொண்டு வந்தால் அதில் முழுக்க முழுக்க பயன் பெறப்போவது வடமாநிலங்கள் மட்டுமே. காரணம், அங்குதான் கம்ப்யூட்டர் கல்வியறிவு குறைவாக உள்ளது. எனவே, இந்த திட்டத்தின் பெரும்பகுதி நிதி, வழக்கம்போல வடமாநிலங்களுக்கே செல்ல அதிகம் வாய்ப் புள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்