உயர் கல்வி படிப்பு உறுதி செய்ய 12 பொறுப்பாளர்கள் நியமனம்
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பள்ளிகளில், பிளஸ் 2 முடித்த பள்ளி மாணவ, மாணவிகள் உயர் கல்வி பயில்வதை உறுதி செய்ய, 12 பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.திருப்பூர் மாநகராட்சி கட்டுப்பாட்டில் மொத்தம், 12 பள்ளிகள் உள்ளன. சமீபத்தில் வெளியான பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் தேர்ச்சி பெறவில்லை. அதில், பத்தாம் வகுப்பு பொது தேர்வில், நான்கு பள்ளிகள் மட்டுமே, 90 சதவீதத்துக்கும் கூடுதலான தேர்ச்சி பெற்றது.மாநகராட்சியில் பள்ளி அளவில் குமரானந்தபுரம் பள்ளி அதிக தேர்ச்சி (97.80) சதவீதத்தை பெற்றது. தேர்ச்சி பட்டியலில் குறைந்தபட்சமாக சின்னச்சாமி அம்மாள் பள்ளி, 67.60 தேர்ச்சி சதவீதம் பெற்றது. மாணவியர் பள்ளிகளை பொறுத்த வரை, அதிகபட்சமாக பழனியம்மாள் பள்ளி, 93.50 சதவீதம் பெற்றது.பொது தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளை மீண்டும் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற வைக்க கல்வித்துறை மற்றும் மாநகராட்சி நிர் வாகம் பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. தொடர்ந்து, பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றவர்கள், உயர் கல்வியை தொடரும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளனர்.ஆலோசனை கூட்டம்திருப்பூர் மாநகராட்சி யில் பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களின் விபரங்களை கண்காணிக்கும் வகையில் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் தலைமையில் நேற்று நடந்தது.கமிஷனர் பேசியதாவது:திருப்பூர் மாநகராட்சி பகுதியிலுள்ள, 12 பள்ளிகளில் பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளின் விபரங்கள் அனைத்தும் புதிய செயலியில் இணைக்கப்பட்டுள்ளது. அதில், உயர்கல்வியை தொடர்ந்தவர்கள் மற்றும் தொடராதவர்கள் விபரங்கள் இடம் பெற்றுள்ளது.படிப்பை தொடராதவர்களை கண்டறிந்து, அவர்கள் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்படும்.இதனை கண்காணிக்க பள்ளி ஒன்றுக்கு தலா, ஒருவர் என, 12 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சியில் கடந்த ஆண்டு மற்றும் தற்போது பிளஸ்2 முடித்தவர்கள் என, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கண்காணிக்கப்படுகின்றனர்.இவ்வாறு, அவர் பேசினார்.