உ.பி.,யில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த 17 பேர் கொண்ட குழு
லக்னோ: புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த, 17 பேர் கொண்ட குழுவை அமைக்க உள்ளதாக, உ.பி., அரசு அறிவித்துள்ளது.இந்தியாவின் புதிய கல்விக் கொள்கையை, கடந்த ஜூலை 29ம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. அதில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்குவது, தொழில்முறைக் கல்வி, நெகிழ்வான பாடத்திட்டங்கள், பாடங்களில் படைப்புச் சேர்க்கைகள், ஒருங்கிணைந்த தொழில் கல்வி மற்றும் உரிய சான்றிதழ்களுடன் பல்முனை நுழைவு, வெளியேறுதல், ஆய்வுகளுக்காக அதிக நிதி ஒதுக்குவது, ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழிக் கல்வி, மும்மொழிக் கொள்கை, எம்.பில் படிப்புகள் ரத்து உள்ளிட்ட பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த, உ.பி., அரசு 17 பேர் கொண்ட குழுவை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. முதல்வர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், இது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இக்குழுவுக்கு அம்மாநில துணை முதல்வர் தினேஷ் சர்மா தலைவராகவும், மாநில அடிப்படைக் கல்வித் துறை அமைச்சர் சதிஷ் த்விவேதி துணைத் தலைவராகவும் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மற்ற உறுப்பினர்களாக கிரிஷ் சந்திர திரிபாதி, ரேணுகா குமார், ராதா சவுகான், மோனிகா எஸ் கார்க், ஆராதனா சுக்லா, அனில் ஸ்வரூப், அசோக் கங்குலி, வினய் குமார் பதாக், கிருஷ்ணா மோகன் திரிபாதி, அரவிந்த் மோகன், நிஷி பாண்டே, அப்பாஸ் நாயர், வசஸ்பதி மிஸ்ரா, கந்தல்வால், விஜய் கிரண் ஆனந்த் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.