சித்த மருத்துவ பல்கலையை துவக்க கோரி 2 கோடி கையெழுத்து இயக்கம்
இந்தியாவில் ஆயுர்வேதம், ஓமியோபதி, அலோபதி மருத்துவ பல்கலைகள் அதிகம் உள்ளன. தமிழ் மண்ணின் கலாசாரத்துடன் இணைந்த மூத்த மருத்துவ முறையான சித்த மருத்துவத்திற்கு பல்கலை இல்லை. இதற்காக சித்த மருத்துவ பல்கலை உருவாக்க தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, நிதி ஒதுக்கி, இடமும் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான சட்ட முன் வடிவு கவர்னரின் கையெழுத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கையெழுத்தாகவில்லை. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தேனியில் சித்த மருத்துவ பல்கலை வேண்டுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு 38 மாவட்டங்களுக்கு சென்று 2 கோடி பேரிடம் கையெழுத்து பெற்று, அதனை கவர்னர், முதல்வரிடம் வழங்கவும் முடிவு செய்துள்ளது. இக்குழுவை சேர்ந்த உலக தமிழ் மருத்துவ கழக தலைவர் மைக்கேல் ஜெயராஜூ, எழுத்தாளர் முத்துநாகு, செயல்பாட்டாளர் மணிகண்டன் ஆகியோர் கூறியதாவது: புதிய தொற்று நோய்களுக்கு சித்த மருத்துவமே தீர்வாக உள்ளது. சித்த மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்ள புதிய பல்கலை துவங்கினால் மட்டுமே சாத்தியம். இந்த நவீன உலகில் சித்த மருத்துவ சிறப்புகளை பகிர்வதற்கு ஒரு தனித்துவமான உயராய்வு மையம் வேண்டும் என்பதை கவர்னரிடம் வலியுறுத்தவுள்ளோம் என்றனர்.