தமிழக அரசில் காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை 2 லட்சம்
அரசு பணிகள் முடங்கும். அதற்கு முன், தேர்வாணையம் மூலம் இப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மாநிலம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அடிப்படை பதவியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடம், மாநில தேர்வாணையத்தின் மூலம் குரூப் 4 தேர்வு நடத்தி, நிரப்பப் படுகின்றன. கடந்த, 2000ம் ஆண்டுக்கு பிறகு இப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால், தற்போதைய நிலையில் ஒரு லட்சம் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.பணிபுரியும் இளநிலை உதவியாளர்களில் பெரும்பாலானோர் 2010, 2011ம் ஆண்டுகளில் ஓய்வு பெறுகின்றனர்.இந்த கணக்கை சேர்த்தால் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை இரண்டு லட்சமாக உயர்ந்து விடும். அதுவரை பணியிடங்களை நிரப்பாவிட்டால், அரசு பணிகளும் முழுமையாக ஸ்தம்பித்து விடும். எனவே, அரசு ஊழியர் சங்கம் தற்போது இந்த கோரிக்கைக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.இது குறித்து, அரசு ஊழியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது: தற்போதைய நிலையில் வேலை வாங்கும் அதிகாரிகள் எண்ணிக்கை அதிகமாகவும், வேலை செய்யும் அலுவலர்கள் எண்ணிக்கை குறைவாகவும் உள்ளது. அரசின் அடிப்படை பணியிடமான இளநிலை உதவியாளர்கள் பற்றாக்குறையால், அரசு அலுவலகங்களில் மூன்று பேரின் வேலைகளை ஒரே இளநிலை உதவியாளர்கள் பார்க்க வேண்டிய நிலை உள்ளது.பணிப்பளு, மன உளைச்சலில் சிக்கி ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.மக்களுக்கு உரிய நேரத்தில் சேவைகளை செய்ய முடியவில்லை. காலிப்பணியிடங்களை நிரப்பாததால் நகர், கிராமப்பகுதிகளில் படித்து முடித்து வேலையில்லாமல் இருப்பவர்களின் வாய்ப்புகளும் மறுக்கப்படுகிறது. இன்னும் சில மாதங்களுக்குள் காலிப்பணியிடங்களை நிரப்பாவிட்டால், அரசு பணிகளில் பெரும் தேக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இப்பிரச்னையை நாங்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.இது குறித்து அரசு வட்டாரங்கள் கூறியதாவது:அரசு பணிகள் படிப்படியாக கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வருகின்றன. இதனால், அரசு அலுவலகங்களில் கடந்த காலங்களைப் போல அதிக அளவு ஊழியர்கள் தேவை இல்லை. அதிகாரிகளே நேரடியாக சில வேலைகளை மேற்கொள்ளும் வகையில் கம்ப்யூட்டர் சாப்ட்வேர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. முக்கியமில்லாத பணிகள் தனியாரிடமும் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. எனவே, ஊழியர் பற்றாக்குறை பெரிய அளவில் ஏற்படாது. இவ்வாறு அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.