தேர்தல் விழிப்புணர்வு போட்டி மாநில அளவில் 20 மாணவர் தேர்வு
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், தேர்தல் விழிப்புணர்வு கல்விக்குழு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் வினாடி- வினா போட்டி நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவஜோதி தொடங்கி வைத்தார்.இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தியும், இளம் வாக்காளர்களிடையே தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பள்ளி மற்றும் கல்லுாரிகளில் தேர்தல் கல்வி அறிவுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களும், கல்லுாரி மாணவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.இக்குழுக்களில் உள்ள மாணவர்களுக்கு கல்வி நிறுவன அளவிலும், தொடர்ந்து சட்டசபை தொகுதி அளவிலும் கட்டுரை, வினாடி வினா போட்டி நடத்தப்பட்டன. கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில் நடக்கும் போட்டிகளில் வெற்றி பெற்ற, 80 மாணவ, மாணவியர் தற்போது மாவட்ட அளவிலான போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில் கட்டுரை மற்றும் வினாடி வினா பிரிவில் சிறப்பிடம் பெற்ற, 20 மாணவர்கள் மாநில அளவில் நடைபெறவுள்ள இறுதி போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.நிகழ்ச்சியில் தேர்தல் தாசில்தார் தனசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.