உள்ளூர் செய்திகள்

முன்னாள் அல் பலாஹ் பல்கலை மாணவர்; 2008 குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டவர்

புதுடில்லி: டில்லியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதல் குற்றவாளியைப் போலவே, டில்லி மற்றும் ஆமதாபாதில் 2008ல் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கிய பயங்கர வாதியும், ஹரியானாவின் அல் பலாஹ் பல்கலையில் பயின்றது தெரிய வந்துள்ளது.டில்லி செங்கோட்டையில், கடந்த 10ம் தேதி போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டிருந்த கார் வெடித்து சிதறியது. இதில், 15 பேர் பலியாகினர்; 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அ டைந்தனர்.பயங்கரவாத தாக்குதல் என அறிவிக்கப்பட்ட இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த தாக்குதலில் ஈடுபட்டு உயிரிழந்த முக்கிய குற்றவாளியான டாக்டர் உமர் நபி, ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள அல் பலாஹ் பல்கலையில் டாக்டராக பணியாற்றியது விசாரணையில் தெரியவந்தது.குண்டு வெடிப்புஇந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பிற டாக்டர்களும், இதே பல்கலையில் பணியாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதேசமயம், பல்கலை மானிய கமிஷனால், அல் பலாஹ் பல்கலை அங்கீகரிக்கப்படவில்லை என்பதும் விசாரணையில் அம்பலமானது.இந்நிலையில், 2008ல் தலைநகர் டில்லி மற்றும் குஜராத்தின் ஆமதாபாதில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய பயங்கரவாதி மிர்சா ஷதாப் பெய்க், அல் பலாஹ் பல்கலையில் படித்து பட்டம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.உத்தர பிரதேசம், ஆசம்கர் மாவட்டம் பரிடி கிராமத்தைச் சேர்ந்த இவர், துவக்கத்தில் ஒன்பதாம் வகுப்பில் தோல்வியை தழுவினார். பின் பிளஸ் 2 முடித்த மிர்சா, 2007ல் அல் பலாஹ் பொறியியல் கல்லுாரியில் மின்னணுவியல் மற்றும் கருவியியல் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.இந்தியன் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் ஆசம்கர் பகுதிக்கு தலைமை தாங்கிய மிர்சா ஷதாப் பெய்க், தன் உறவினரான ஷாகிப் நிசார் உட்பட பல இளைஞர்களை பயங்கரவாத அமைப்புகளில் சேர்த்துள்ளது, 2008ல் போலீசார் அளித்த தகவலின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.டில்லி தாக்குதல்ஆசம்கரைச் சேர்ந்த அதிப் அமீன் தலைமையிலான பயங்கரவாத அமைப்பையும், டில்லியில் மாணவர்கள் அடங்கிய பயங்கரவாத குழுவையும் ஒன்றிணைத்ததில், பெய்க் முக்கிய பங்காற்றியுள்ளார்.கடந்த, 2008ல் டில்லி மற்றும் ஆமதாபாத் குண்டுவெடிப்புக்கு மூளையாகவும் செயல்பட்டுள்ளார். ஆமதாபாதில் நடந்த குண்டுவெடிப்பில், 56 பேரும், டில்லியில் நடத்தப்பட்ட தாக்குதலில், 26 பேரும் கொல்லப் பட்டனர்.இந்த கொடூர சம்பவங்கள் மட்டுமின்றி, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புக்கு தேவையான வெடிப்பொருட்களை உருவாக்க பயங்கரவாதிகள் ரியாஸ் மற்றும் யாசினுக்கு பெய்க் உதவியதும் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.சதி திட்டம்மஹாராஷ்டிராவின் புனே ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு சதித்திட்டம் தீட்டியவர்களில் முக்கியமானவர் பெய்க். டில்லியின் ஜாஹிர் நகரில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையின் போது, இது தொடர்பான அடையாள அட்டைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப் பட்டன.கடந்த, 2008 தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக, இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், மிர்சா ஷதாப் பெய்க் மற்றும் முஹமது காலித் ஆகியோர் தப்பிச் சென்றனர். உளவுத் துறையின் தகவலின்படி, மிர்சா ஷதாப் தற்போது பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.நம் நாட்டில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான அவர், கடந்த 2008 முதல் தலைமறைவாக உள்ளதால், அவரை கைது செய்ய சர்வதேச போலீசாரின் உதவியை என்.ஐ.ஏ., அதிகாரிகள் நாடியுள்ளனர்.10 நாள் என்.ஐ.ஏ., காவல் டில்லி குண்டுவெடிப்புக்கு முன்பாகவே வெடிப்பொருட்கள் வைத்திருந்ததாக ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த டாக்டர் முஸ்ஸாமில், அனந்த்நாகைச் சேர்ந்த டாக்டர் ஆதில் அகமது, ஷோபியானைச் சேர்ந்த முப்தி இர்பான் அகமது வாகே, உத்தர பிரதேசத்தின் லக்னோவைச் சேர்ந்த பெண் டாக்டர் ஷாஹீன் சயீத் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நால்வரையும், ஸ்ரீநகரில் உள்ள என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்களை, 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ.,வுக்கு டில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாக்குதலில் வெடித்த காரின் உரிமையாளர் அமீர் ரஷீத் அலி, தொழில்நுட்ப உதவி வழங்கிய ஜசீர் பிலால் ஆகியோர் என்.ஐ.ஏ.,வால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், டில்லி குண்டுவெடிப்பில் கைதானவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்