மந்தகதியில் ஐ.ஐ.டி. கேம்பஸ் இன்டர்வியூ: ஆனாலும் ரூ.22 லட்சம் ஊதியம்!
இந்த ஆண்டு அதிகபட்ச ஆண்டு ஊதியமாக ரூ.22 லட்சம் கொடுத்து ஒரு பன்னாட்டு நிறுவனம் மாணவர்களை வேலைக்கு எடுத்துள்ளது. கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மாணவர்களைத் தேர்வு செய்ய வந்துள்ள நிறுவனங்கள் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்களைத் தேர்வு செய்கின்றன. கடந்த ஆண்டில் முதல் நாளில் 6 நிறுவனங்கள் 38 பேரைத் தேர்வு செய்தன. இந்த ஆண்டு அதே எண்ணிக்கையிலான நிறுவனங்கள் தேர்வு செய்த மாணவர்கள் எண்ணிக்கை 28 பேர்தான். டிசம்பர் முதல் தேதியிலிருந்து டிசம்பர் 4ம் தேதி வரை முதல் நான்கு நாட்களில் 48 மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில் முதல் நான்கு நாட்களில் இந்த எண்ணிக்கை 76. உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, தொழில் நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மாணவர்களைத் தேர்வு செய்வதிலும் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் ஊதிய விகித்தைப் பொருத்தவரையில் அவ்வளவாக மாற்றமில்லை. கடந்த ஆண்டில் அதிகபட்ச ஆண்டு ஊதியமாக ரூ.24 லட்சம் கிடைத்தது. இந்த ஆண்டில் இதுவரை அதிகபட்ச ஆண்டு ஊதியமாக ரூ.22 லட்சம் கிடைத்துள்ளது. பிரபல எண்ணெய் நிறுவனமான ஸ்லம்பர்ஜர் நிறுவனம் இந்த அளவுக்கு ஊதியம் கொடுத்து 5 மாணவர்களைத் தேர்வு செய்துள்ளது. கடந்த ஆண்டில் இதே நிறுவனம் ரூ.24 லட்சம் ஆண்டு ஊதியத்தில் 8 பேரைத் தேர்வு செய்ததது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் கடந்த ஆண்டைப் போலவே 200 தொழில் நிறுவனங்கள் மாணவர்களைத் தேர்வு செய்ய சென்னை ஐ.ஐ.டி.,க்கு வர சம்மதித்துள்ளன. வேலைவாய்ப்பு கோரி 1,050 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். கேம்பஸ் இன்டர்வியூ நடத்த நாள்தோறும் ஆறு நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கிறோம். இதுவரை மெக்கன்ஸி, மோர்கன் ஸ்டான்லி, ஸ்லமர்ஜர், ஷெல் டெக்னாலஜி, ஐ.பி.எம். ரிசர்ச் லேப், ஐ.டி.சி., அமேசான், மைக்ரோசாப்ட், யாகூ..இப்படி கடந்த ஆண்டில் வந்த பல நிறுவனங்கள் இந்த ஆண்டில் இதுவரை கேம்பஸ் இன்டர்வியூக்கு வந்துள்ளன. பல நிறுவனங்கள் கடந்த ஆண்டைவிட குறைவான எண்ணிக்கையில் மாணவர்களைத் தேர்வு செய்கின்றன. ஆனால் ஊதியம் வழங்குவதில் பெரிதாக மாற்றமில்லை. இதுவரை முதல் நான்கு நாட்கள் நடந்த கேம்பஸ் இன்டர்வியூவில் ரூ.8 லட்சத்திலிருந்து ரூ.22 லட்சம் வரை ஆண்டு ஊதியத்தில் மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது என்கிறார் சென்னை ஐ.ஐ.டி.,யின் துணைப் பதிவாளரும் வேலைவாய்ப்புப் பிரிவு அதிகாரியுமான ஜெயக்குமார். முதல் மூன்று நாட்கள் நடைபெற்ற கேம்பஸ் இன்டர்வியூவில் 24 பி.டெக்., மாணவர்களுக்கும் 17 டியூயல் டிகிரி மாணவர்களுக்கும் 5 எம்.டெக்., மாணவர்களுக்கும் 2 எம்.பி.ஏ., மாணவர்களுக்கும் வேலைகிடைத்துள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரிக்கல் பாடப்பிரிவு மாணவர்கள்தான் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை பெற்றுள்ளனர். இந்த ஆண்டில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மாணவர்களைத் தேர்வு செய்வதில் கோர் என்ஜினியரிங் தொழில் நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. நிதி மற்றும் வங்கி நிறுவனங்களிடம் ஆர்வமில்லை. இந்த ஆண்டு கேம்பஸ் இன்டர்வியூ பிப்ரவரி இரண்டாவது வாரம் வரை இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். எம்.டெக்., மாணவர்களைவிட பி.டெக்., மாணவர்களைத் தேர்வு செய்யவே பல தொழில் நிறுவனங்கள் விரும்புகின்றன. அதேபோல, தங்களது நிறுவனத்தில் கோடை காலப் பயிற்சி பெற்ற மாணவர்களையே வேலைக்கு எடுத்துக் கொள்வதில் முன்னுரிமை காட்டும் நிறுவனங்களும் உள்ளன. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும், கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மாணவர்களைத் தேர்வு செய்ய 200 நிறுவனங்கள் சென்னை ஐ.ஐ.டி.,க்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே 180 நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் மாணவர்களைத் தேர்வு செய்ய சம்மதம் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் 6 பேரைத் தேர்வு செய்தோம். இந்த ஆண்டில் ஆண்டுக்கு ரூ.7லட்சம் ஊதியத்தில் மூன்று பேரை தேர்வு செய்துள்ளோம் என்று கூறும் நெட்ஆப் நிறுவன அதிகாரி கணேஷ் சுந்தர், தகவல் தொழில்நுட்பத் துறை புராடக்ட் நிறுவனங்கள் வேலைக்கு தேர்வு செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை அவ்வளாகக் குறையவில்லை. அதேசமயம், ஐ.டி., சேவை நிறுவனங்கள் புதிய ஆட்களைத் தேர்வு செய்யும் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்து விட்டது என்கிறார் அவர். இந்த மந்த நிலைமை 2010ம் ஆண்டிலிருந்துதான் நிலைமை சரியாகலாம் என்கிறார்கள் கேம்பஸ் இன்டர்வியூக்கு வந்திருந்த அமெரிக்க நிறுவனமான குவால்காம் நிறுவன அதிகாரிகள். 105 பேருக்கு எழுத்துத் தேர்வு நடத்தி, அதில் 18 பேரை நேர்முகத் தேர்வுக்கு அழைத்து அதில் 3 பேரை தேர்ந்தெடுத்துள்ளது நெட்ஆப் நிறுவனம். இதுபோல, நல்ல நிறுவனங்களில் நல்ல ஊதியத்தில் வேலையைத் தேட, பல மாணவர்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு தேர்வுகளையாவது எழுத வேண்டிய நிலை உள்ளது. கடந்த ஆண்டில் 1099 மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூவுக்காக பதிவு செய்தனர். அதில் 833 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. இந்த ஆண்டு பதிவு செய்த மாணவர்களில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.