ராசிபுரம் அரசு கல்லுாரியில் சிறப்பு ஒதுக்கீட்டில் 27 மாணவர்கள் சேர்க்கை: 62 இடங்கள் காலி
ராசிபுரம் : சிறப்பு ஒதுக்கீடு முடிந்த நிலையில், ராசிபுரம் அரசு கல்லுாரியில், 27 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். 62 இடங்கள் காலியாக இருப்பதாக, கல்லுாரி முதல்வர் பானுமதி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:ராசிபுரம் அடுத்த ஆண்டகலுார் கேட் அரசு கல்லுாரியில், 2024-25ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில், சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும், 29ல் தொடங்கி, நேற்றுடன் சேர்க்கை முடிவடைந்தது. இதில், மாற்றுத்திறன் மாணவர்கள், 12, முன்னாள் ராணுவத்தினர், 1, என்.சி.சி., 1, விளையாட்டு பிரிவில், 13 என மொத்தம், 27 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். முதல்கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன், 10ல் தொடங்கி, 15 வரையும், இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, 24ல் தொடங்கி, 29 வரை நடக்கிறது. இதுகுறித்து தகவலை, மின்னஞ்சல், வாட்ஸாப், கைப்பேசி மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இக்கல்லுாரியில், மாற்றுத்திறனாளிகளுக்கு, 48, முன்னாள் ராணுவத்தினருக்கு, 6, பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் பிரிவில், 3, அந்தமான் நிகோபர் பகுதியை சேர்ந்தவர்கள், 2, என்.சி.சி.,1, விளையாட்டு பிரிவில், 29 என மொத்தம், 89 இடங்கள் உள்ளன. ஆனால், இதில், 27 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. சிறப்பு ஒதுக்கீடு செய்ததில், 62 இடங்கள் காலியாக உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.