உள்ளூர் செய்திகள்

மைதானம் கேட்டு வகுப்பை புறக்கணித்து வரும் 4ம் வகுப்பு மாணவியுடன் நீதிபதி பேச்சு

துமகூரு: அரசு பள்ளியில் மதில் சுவர், மைதானம் இல்லை என்பதற்காக, வகுப்புகளை புறக்கணித்து வரும் நான்காம் வகுப்பு மாணவியை, மூத்த சிவில் நீதிபதி சந்தித்தார்.கர்நாடகாவின் துமகூரு தாலுகா, பெலதாரா கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில், நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி, சிம்ரா சனோபர்.மதில் சுவர் தான் படிக்கும் பள்ளியில் விளையாட்டு மைதானம், மதில் சுவர் கட்டி தரக்கோரி பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் சித்தராமையாவுக்கு கடந்த 3ம் தேதி, மாணவி கடிதம் எழுதியிருந்தார்.'சுற்றுச்சுவர் கட்டித் தரும் வரை பள்ளிக்குச் செல்ல மாட்டேன்' என, மாணவி சிம்ரா சனோபர் கூறியிருந்தார். அதுபோல, 15 நாட்களுக்கும் மேலாக மாணவி, பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே உள்ளார்.இந்நிலையில், துமகூரு மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய செயலரும், மூத்த சிவில் நீதிபதியுமான நுாருன்னிசா, பெலதாரா அரசு பள்ளியில் ஆய்வு செய்வதற்காக சென்றார். பள்ளி கட்டடத்தின் நிலைமை, தரம் குறித்து அவர் ஆய்வு செய்தார்.அப்போது, மாணவி சிம்ரா பல நாட்களாக பள்ளிக்கு வராமல் இருப்பதை அறிந்தார். இதையடுத்து, மாணவியின் வீட்டுக்கு நீதிபதி நுாருன்னிசா சென்றார். மாணவியுடன் பேசினார்.மாணவி கூறுகையில், “பள்ளியில் மதில் சுவர் இல்லாததால், அருகிலுள்ள திருமண மண்டபத்திற்கு வருவோர், தங்கள் பள்ளியில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். பலரும் பள்ளி வளாகத்திற்குள் புகை பிடிக்கின்றனர், சிறுநீர் கழிக்கின்றனர். இதனால், பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது,” என்றார். இதை கேட்ட நீதிபதி நுாருன்னிசா, மாணவியின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு, வட்டார கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தினார்.இருப்பினும், “சுற்றுச் சுவர், விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தரும் வரை பள்ளிக்கு வர மாட்டேன்,” என, மாணவி சிம்ரா பிடிவாதமாக கூறிவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்