பள்ளி மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா: ரூ. 55.52 லட்சம் ஒதுக்கீடு
திருநெல்வேலி: தமிழகத்தில் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக 55.52 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்க கூறுகளான பெண் கல்வி, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் நலக் கல்வி, சிறுபான்மையின மாணவர்கள் நலக் கல்வி ஆகிய திட்ட கூறுகளின் கீழ் 2009-10ம் கல்வி ஆண்டில் தமிழகம் முழுவதும் 8ம் வகுப்பு படிக்கும் 3,270 மாணவ, மாணவிகளை 55.52 லட்சம் செலவில் 326 பாதுகாவலர்கள் துணையோடு வரலாற்று சிறப்பு மிக்க, கலாச்சார மற்றும் இயற்கை சூழல் சார்ந்த இடங்களுக்கு 3 நாட்கள் கல்வி சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கம், இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் இணைந்து இந்த சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளன. நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, கரூர், நாமக்கல், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, தேனி மற்றும் நீலகரி மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள வள்ளுவர் கோட்டம், கிண்டி சிறுவர் பூங்கா, பாம்பு பண்ணை, பிர்லா கோளரங்கம், சோழ மண்டல கலை கிராமம், தட்சின் சித்தாரா, தலைமை செயலகம், மெரினா கடற்கரை, பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, மாமல்லபுரம், முதலை பண்ணை, திருக்கழுக்குன்றம், ஏகாம்பர நாதர் கோயில், காமாட்சி அம்மன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில் ஆகிய இடங்களுக்கும் அழைத்து செல்லப்படுகின்றனர். கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள கல்லணை, முக்கொம்பு, ஸ்ரீரங்கம், ஜோசப் சர்ச், மலைக் கோட்டை, மியூசியம், பெரிய கோயில், சரஸ்வதி மகால், புதுக்கோட்டை அரண்மனை, சிவகங்கை பூங்கா, பூண்டி மாதா கோயில், செட்டிநாடு, திருமயம் அரண்மனை, சித்தன்னவாசல், நார்த்தா மலை ஆகிய இடங்களுக்கும் அழைத்து செல்லப்படுகின்றனர். சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் நெல்லை, கன்னியாகுமரி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள நெல்லையப்பர் கோயில், பொட்டல்புதூர் தர்க்கா, மாவட்ட அறிவியல் மையம், கழுகுமலை, திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை, காந்தி மண்டபம், குமரி அம்மன் கோயில், கன்னியாகுமரி சர்ச், வட்டக்கோட்டை, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மகால், காந்தி மியூசியம், ராஜாஜி பூங்கா, கள்ளழகர் கோயில், பழமுதிர் சோலை ஆகிய இடங்களுக்கும் கல்வி சுற்றுலா அழைத்து செல்கின்றனர். மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுக்கும் போது படைப்பாற்றல் கல்வியை சிறப்பாக செயல்படுத்தும் நடுநிலைப் பள்ளிகளை சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளை தேர்வு செய்ய வேண்டும்.கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்து தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மையின முஸ்லிம் மாணவர்களையும் தேர்வு செய்ய வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் வெங்டேசன் உத்தரவிட்டுள்ளார்.நெல்லை மாவட்டத்தில் இந்த கல்வி சுற்றுலாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெசோலைட் செல்வி தெரிவித்தார்.