இனி பள்ளிக்கு போகலாம் ஜாலியா! மாணவர்களுக்காக 7 சிறப்பு பஸ்கள்
கோவை: பள்ளிக்குச் சரியான நேரத்தில் செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணிக்கின்றனர். இதனால் சில நேரங்களில் பள்ளிக்குத் தாமதமாகச் செல்வதுடன், விபத்து அபாயமும் உள்ளது.இதை தவிர்க்க, பள்ளி மாணவர்களுக்காக காலை 8:00 - 8:30 மணி மற்றும் மாலை 4:00 - 4:30 மணி ஆகிய நேரங்களில் தலா ஒரு 'டிரிப்' பிரத்யேகமாக பஸ்களை இயக்கும் திட்டம் கோவையில் துவங்கப்பட்டுள்ளது. இப்பஸ்களின் டிஜிட்டல் அறிவிப்புப் பலகையில் 'மாணவர்களுக்காக மட்டும்' எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.மாநகரில், துடியலூர் - போத்தனூர் (தடம் எண் 4), வடவள்ளி - ஒண்டிபுதூர் (1சி), காந்திபுரம் - உக்கடம் (130), பேரூர் - சித்ரா (2), காந்திபுரம் - என்.ஜி.ஜி.ஓ., காலனி (38ஏ), நம்பர் 5 சிவானந்தா காலனி ஆகிய ஏழு வழித்தடங்களில் இச்சேவை வழங்கப்படுகிறது.போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுகையில், “அனைத்து மாவட்டங்களிலும் இச்சேவை துவங்கப்பட்டுள்ளது. இப்பஸ்கள் செல்லும் வழித்தடத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் டிஜிட்டல் போர்டில் 'மாணவர்களுக்காக மட்டும்' என, இருந்தால் தயக்கமின்றி ஏறிச் செல்லலாம். புறநகர்ப் பகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் இச்சேவை விரிவுபடுத்தப்படும்,” என்றனர்.