செட் தேர்வை நடத்துகிறது பாரதியார் பல்கலை
கோவை: கோவை பாரதியார் பல்கலை சார்பில், பேராசிரியர் தகுதிக்கான, "செட்" தேர்வு, ஆகஸ்ட் 14ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள், வரும் 14ம் தேதி முதல் வினியோகிக்கப்படுகின்றன. இதுகுறித்து பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன் கூறியதாவது, "பேராசிரியர் தகுதிக்கான "செட்" தேர்வு, வரும் ஆக. 14ம் தேதி நடக்கிறது. விண்ணப்பங்கள், வரும் 14ம் தேதி முதல் வினியோகிக்கப்படுகின்றன. தமிழ், பொருளியல் உட்பட 27 பாடங்களில் தேர்வு எழுதலாம். பல்கலை சார்பில், ஐந்தாவது முறையாக இந்த தேர்வு நடக்கிறது.சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, சிதம்பரம், காரைக்குடி, வேலூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 15 இடங்களில் தேர்வு நடக்கிறது. குறைந்தபட்சம், 55 சதவீத மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற முதுநிலை பட்டதாரிகள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிந்த இரண்டு மாதங்களுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்.விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க, ஜூன் 14ம் தேதி இறுதி நாள். பல்கலையில், நேரிடையாகவோ அல்லது தபால் மூலமாகவோ 1,000 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை பெறலாம். மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு, கட்டணத்தில் விலக்கு உண்டு. விண்ணப்பங்களை பல்கலையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டவுண்லோடு செய்து கொள்ளலாம்" என்றார்.