ஆதிதிராவிடர் பள்ளியில் மரத்தடியில் சமைக்கும் அவலம்
உளுந்தூர்பேட்டை: செம்மனங்கூர் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில், சத்துணவு சமையல் கூடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், மரத்தடியில் சமைக்கும் அவல நிலை உள்ளது. விழுப்புரம் மாவட்டம், திருநாவலூர் அடுத்த செம்மனங்கூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல துவக்கப் பள்ளியில், 210 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் உள்ள சத்துணவு சமையல் கூடம், இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால், சமையலர்கள் திறந்த வெளியில், மரத்தடியில் வைத்து சமையல் தயார் செய்து வருகின்றனர். இதனால், உணவு பொருட்கள் சுகாதாரம் இல்லாமல் இருக்கின்றன. மழைக் காலங்களில் வகுப்பறைக்கு உள்ளே வைத்து சமையல் செய்யும் சூழ்நிலையும் உள்ளதால், மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படுகிறது. மாணவர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு, ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் பள்ளிக்கு, உடனடியாக புதிய சமையல் அறை கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.