உள்ளூர் செய்திகள்

பிசியோதெரபி டிப்ளமோ படிப்பிற்கு கடும் எதிர்ப்பு

இன்றைய நவீன மருத்துவத்தில், இயன்முறை மருத்துவம் எனப்படும், "பிசியோதெரபி&' முக்கிய இடம் வகிக்கிறது. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள், தசைப் பிரிவு நோய் மற்றும் நரம்பியல் சம்பந்தமான முடக்குவாதம், பக்கவாதம் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவோர், வாகன விபத்துகளில் கை, கால் உள்ளிட்ட இடங்களில் ஏற்படும் எலும்புமுறிவால் பாதிக்கப்படுவோர் போன்றோருக்கு, மருத்துவ சிகிச்சையுடன், அவர்களின் மறுவாழ்வுக்கு, "பிசியோதெரபி&' சிகிச்சையும் அவசியமாகிறது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, கடந்த 1987ம் ஆண்டு, தமிழக அரசு, "டிப்ளமா&' படிப்பாக இருந்து வந்த பிசியோதெரபியை, பட்டப்படிப்பாக மாற்றியது. இன்று, நான்கரை ஆண்டுகள் பட்டப்படிப்பு (பி.பி.டி.,), பட்டமேற்படிப்பு (எம்.பி.டி.,), ஆராய்ச்சிப் படிப்பு என, இத்துறை வளர்ந்துள்ளது.ஆனால், மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற, பி.எஸ்.எஸ்., (பாரத் சேவாக் சமாஜ்) நிறுவனத்தின் அனுமதியுடன், தமிழகம் முழுவதும் இயங்கிவரும், தனியார் பயிற்சி மையங்களில், "பிசியோதெரபி&' ஒரு ஆண்டு டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்பாக வழங்கப்படுகிறது. "இம்மையங்களில், டிப்ளமா முடிப்பவர்களால், தங்களின் வேலைவாய்ப்பு பறிபோவதுடன், இவர்களுக்கு முறையான பயிற்சி இல்லாததால், தவறான சிகிச்சை அளிக்கும் அபாயமும் உள்ளது&' என, பிசியோதெரபி பட்டதாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, இயன்முறை மருத்துவர்கள் பெருமன்றத்தின் மாநில தலைவர் கிருஷ்ணகுமார் கூறும்போது, "பிசியோதெரபி பட்டதாரிகளுக்கு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதிய வேலைவாய்ப்பு இல்லை. இதற்கு, குறுகிய மனப்பான்மை கொண்ட சில தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள், பிசியோதெரபியில் டிப்ளமா முடித்தவர்களை, குறைந்த சம்பளத்திற்கு பணியமர்த்துவது தான் முக்கிய காரணம். தமது கொள்கை முடிவுக்கு முரணாக வழங்கப்படும், "பிசியோதெரபி&' டிப்ளமா படிப்பிற்கு, தமிழக அரசு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்&'&' என்றார். மருத்துவக் கல்வி இயக்ககத்தின் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறும்போது, "பிசியோதெரபியில் டிப்ளமா முடித்தவர்களுக்கு, தனியார் மருத்துவமனைகள் பணிவாய்ப்பு வழங்குவதைத் தவறெனச் சொல்ல முடியாது. மருத்துவம் சார் படிப்பான பிசியோதெரபியை, பட்டப்படிப்பாக மட்டுமே வழங்க வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை, பிசியோதெரபி பட்டதாரிகள் சட்டரீதியாக நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கலாம்&' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்