சட்ட நுணுக்கங்களைக் கற்றால் வாதாடுவது சுலபம்
சென்னை: &'சட்டத்தின் நுணுக்கங்களை கற்றால் தான், வாதாடுவது சுலபம்&' என, சென்னை ஐகோர்ட் நீதிபதி ராம சுப்ரமணியன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை சார்பில், தேசிய அளவிலான மாதிரி கோர்ட் போட்டிகள், சென்னை அம்பேத்கர் சட்ட பல்கலையில் நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, சட்டக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், ஐகோர்ட் நீதிபதி ராம சுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன், சட்டம் பயின்ற பல முன்னோர்கள் தங்கள் சொத்தையெல்லாம் விற்று, போராட்டங்களில் ஈடுபட்டனர். தற்போது இயங்கி வரும் விவேகானந்தா கல்லூரி, ராமகிருஷ்ணா மிஷன் போன்ற பல்வேறு அறக்கட்டளை நிறுவனங்கள் கல்விச் சேவையை மக்களிடம் அறிமுகப்படுத்தியது. இன்று சட்டத்துறையில் பல மாணவர்கள் பயில்கின்றனர். சட்டம் படித்தோர் மக்கள் சேவைக்காக முன்வர தயங்குகின்றனர். மாதிரி கோர்ட் போட்டிகளில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் இதை மனதில் கொண்டு சட்டம் பயில வேண்டும். சட்டத்தின் ஒவ்வொரு கூறுகளையும் நுணுக்கமாக கற்றால், வழக்குகளை வாதாடுவது சுலபமாக இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார். இதை தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு நீதிபதி ராம சுப்ரமணியன் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதிகளான ஜெயசிம்ம பாபு, பால சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.