பல்கலை பட்டம் பெற மாற்று ஏற்பாடு
மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் பட்டம் பெற, மாற்று ஏற்பாட்டிற்கு கவர்னர் ரோசய்யா ஒப்புதல் வழங்கினார். மதுரை காமராஜ் பல்கலையில் ஏப்ரல் முதல் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. கன்வீனர் குழு பல்கலையை நிர்வகித்து வருகிறது. இங்கு படிப்பு முடித்தவர்கள் வேலைக்குச் செல்ல பட்டம் (டிகிரி சர்டிபிகேட்) அவசியம். பட்டமளிப்பு அல்லாத நேரங்களில், மாணவர்கள் டிகிரி சர்டிபிகேட் பெற ஸ்பெஷல் கான்வகேஷனுக்கு விண்ணப்பிப்பர். இதில் துணைவேந்தர் கையொப்பமிடுவார். பல்கலை சட்டப்படி, துணைவேந்தர் அல்லாதவர்கள் டிகிரி சான்றிதழில் கையொப்பமிட இயலாது. ஆறு மாதங்களாக துணைவேந்தர் இல்லாததால், மாணவர்கள் டிகிரி சான்றிதழ் பெற இயலவில்லை. இதை தீர்க்க, கன்வீனர் குழு தலைவர் (உயர்கல்வித் துறை செயலாளர்) டிகிரி சான்றிதழில் கையொப்பமிட, பல்கலை வேந்தரான கவர்னர் ஒப்புதல் வழங்கினார். இதை பல்கலை பதிவாளர் (பொறுப்பு) ராஜியக்கொடி தெரிவித்தார்.