லால்குடியில் பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரி தொடக்கம்
டாக்டர் கலைஞர் கலை அறிவியல் கல்லூரியை உயர்கல்வி அமைச்சர் கே. பொன்முடி செப்டம்பர் 18ம் தேதி தொடங்கி வைத்தார். நுழைவுத் தேர்வு ரத்து, பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான குறைந்த பட்ச மதிப்பெண்களில் 5 சதவீதம் குறைப்பு ஆகிய காரணங்களால் ஏராளமான கிராமப்புற மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். 2005-06ம் ஆண்டில் தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரமாக இருந்தது 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது என்று பொன்முடி தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது: அதேபோல தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையும் 235லிருந்து 353 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் உள்ள இடங்களின் எண்ணிக்கை 95,808. இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டிவிடும். சிறுபான்மையினருக்கான தனி இடஒதுக்கீடு காரணமாக ஏராளமான முஸ்லிம் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். பொறியியல் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை 610லிருந்து 2565ஆக உயர்ந்துள்ளது. கிறிஸ்துவ மாணவர்களின் எண்ணிக்கை 861லிருந்து 2,757ஆக உயர்ந்துள்ளது. கலை அறிவியல் கல்லூரிகளில் ஷிப்ட் முறை அமல்படுத்தப்பட்டதால் 2007-08ம் ஆண்டில் 6 லட்சத்து 74 ஆயிரத்து 486 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 2007-08ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 5 லட்சத்து 68 ஆயிரத்து 226. தமிழகத்தில் உள்ள 67 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 50 கல்லூரிகள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டவை 2005ம் ஆண்டில் தமிழகத்தில் இருந்த கலை அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 670. தற்போது இந்தக் கல்லூரிகளின் எண்ணிக்கை 860. இதேபோல பாலிடெக்னிக்குகளின் எண்ணிக்கையும் 212லிருந்து 264ஆக அதிகரித்துள்ளது. திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம், திருச்சியில் ஐ.ஐ.எம்., கோவையில் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்றார் பொன்முடி. பி.ஏ. தமிழ், பி.காம்., பி.பி.ஏ., பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் பி.சி.ஏ., போன்ற பட்டப் படிப்புகள் புதிய கல்லூரியில் தொடங்கப்பட்டுள்ளன என்று பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொன்னவைக்கோ தெரிவித்தார். போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு, வனத்துறை அமைச்சர் செல்வராஜ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.